'தம்பி, நுரையீரலுக்கு பக்கத்துல ஆபத்தை வச்சிட்டு சுத்துற'... 'டாக்டர், அதுக்கு நீங்க தான் ஷாக் ஆகணும்'... அதிர்ந்துபோன மருத்துவர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்இளைஞர் ஒருவரின் எக்ஸ் ரேவை பார்த்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் சுரங்க வேலை செய்து வருபவர் கென்ட் ரயன். இவர் தனது வேலை முடிந்து வீட்டிற்குச் சென்ற போது கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ரயனுக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்துவிட்டு வலிநிவாரணி மருந்துகளைக் கொடுத்துள்ளார்கள். பின்னர் சில நாட்கள் ஓய்விலிருந்த ரயன் மீண்டும் சுரங்க வேலைக்குச் சென்றுள்ளார்.
அப்போது காயம் காரணமாக ரயன் சிகிச்சை பெற்று மீண்டும் பணிக்குச் சேர்வதால் மருத்துவ சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்ற ரயன் நடந்த சம்பவங்களைக் கூறி தனக்கு மருத்துவ சான்றிதழ் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
இதையடுத்து அவரை பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அழைத்துச் சென்று எக்ஸ் ரே எடுத்துள்ளார்கள். அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரயனின் விலா எலும்புக்கூட்டுக்கு அருகில், நுரையீரலைத் துளைப்பதில் ஒரு அங்குலம் மட்டுமே இடம் விட்டு கூர்மையான கத்தி ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் அதிர்ச்சியுடன் ரயனிடம் கூறியுள்ளார்கள்.
அப்போது அவர், இதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கு முன்பு நான் சிகிச்சைக்குச் சென்ற மருத்துவமனை தான் இதற்கு முக்கிய காரணம். அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் எந்த அளவிற்குக் கவனமுடன் நோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு சான்று என நெத்தியடி பதிலை அளித்துள்ளார்.
தற்போது அந்த கத்தியை அகற்றும் வரை ரயனால் சுரங்க வேலைக்குச் செல்ல முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். அதே நேரத்தில் அப்போது ஏற்பட்ட காயத்தை அந்த மருத்துவர்கள் ஒழுங்காகப் பார்க்காததால் ஏற்பட்ட விளைவு எனக் கூறியுள்ளார்கள். இந்த சம்பவம் குறித்துப் பேசிய ரயன், ''அவ்வப்போது அந்த பகுதியில் வலி ஏற்படும். ஆனால் பெரிதாக இருக்காது.
எனவே நான் கண்டுகொள்ளாமல் வேலைக்குச் சென்றுவிடுவேன். இப்போது தான் உண்மையான பிரச்சனை ஏதுவென்று தெரிய வந்துள்ளது. நான் அந்த மருத்துவமனை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. இந்த பிரச்சனை விரைவில் தீர்ந்து வேலைக்குப் போனால் போதும் என்று தான் இருக்கிறது'' என ரயன் கூறியுள்ளார்.