'திடீரென பெட் ரூம் கதவை பூட்டிய தாசில்தார்'... 'பற்றி எரிந்த ரூபாய் நோட்டுகள்'... 'ஐயோ, இத்தன லட்சம் போச்சா'... பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாலட்சக்கணக்கான ரூபாயை தாசில்தார் ஒருவர் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனிதன் வாழ அடிப்படைத் தேவைகளில் ஒன்று பணம். ஆனால் அந்த பணம் அளவுக்கு மீறியோ அல்லது தவறான வழியிலோ வருமேயானால் நிச்சயம் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஷிரோஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கல்பேஷ் குமார். இவர் வட்டாட்சியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஒரு பணியைச் செய்து கொடுக்க தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து லஞ்சப் பணமாக லட்சக்கணக்கில் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகார் ஒன்று ரகசியமாக லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்குச் சென்றுள்ளது. இதையடுத்து கல்பேஷ் குமாரின் வீட்டைச் சோதனையிட போலீசார் திடீரென சென்றார்கள்.
போலீசார் வருவதைப் பார்த்த கல்பேஷ் குமார், உடனே தனது வீட்டின் பெட் ரூமுக்குள் சென்று உள்ளே தாளிட்டு கொண்டார். அதோடு நிற்காமல் தனது பீரோவில் வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளைத் தீயிட்டுக் கொழுத்த தொடங்கினார். போலீசார் எவ்வளவோ கூறியும் அவர் கதவைத் திறக்கவில்லை. இதனால் போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார்கள்.
ஆனால் கல்பேஷ் குமார் சாவகாசமாக அனைத்து ரூபாய் நோட்டுகளையும் எரித்து முடித்து விட்டார். இறுதியில் அங்கே தீயில் எரிந்த ரூபாய் நோட்டுகளின் சாம்பல் மட்டுமே கிடந்தது. வட்டாட்சியர் கல்பேஷ் குமார் எரித்து சாம்பலாக்கிய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 15 லட்சம் முதல் 20 லட்சம் இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.