'இந்தியா' உள்பட சில நாடுகளில் மட்டும்... '6 மடங்கு' வரை 'குறைவாகவுள்ள' கொரோனா 'இறப்பு' விகிதம்... ஆய்வில் வெளியாகியுள்ள 'காரணம்'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 08, 2020 09:04 PM

காசநோய் பி.சி.ஜி தடுப்பூசியை பயன்படுத்திவரும் இந்தியா உள்பட சில நாடுகளில் கொரோனா இறப்பு விகிதம் 6 மடங்கு அளவுக்கு குறைவாக காணப்படுகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

India Corona Death Rate Lower In Countries That Use BCG Vaccine

இதுகுறித்த ஆராய்ச்சியில், "பி.சி.ஜி தடுப்பூசியின் உலகளாவிய கொள்கைகள் இல்லாத நாடுகளான இத்தாலி, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா போன்றவை உலகளாவிய மற்றும் நீண்டகால பி.சி.ஜி கொள்கைகளைக் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போதைய உலகளாவிய பி.சி.ஜி தடுப்பூசி கொள்கையை ஈரான் 1984ஆம் ஆண்டு தொடங்கியதால் அங்கு கொரோனா  இறப்பு விகிதம் உயர்ந்துள்ளது. 

அதாவது ஈரான் 10 லட்சம் மக்களுக்கு 19.7 இறப்புகளைக் கொண்டுள்ளது. ஆனால் 1947ஆம் ஆண்டில் தனது உலகளாவிய பி.சி.ஜி கொள்கையைத் தொடங்கிய ஜப்பான் 10 லட்சம் மக்களுக்கு 0.28 இறப்புகளைக் கொண்டுள்ளது. 1920 ஆம் ஆண்டில் உலகளாவிய தடுப்பூசியைத் தொடங்கிய பிரேசில், 10 லட்சம் மக்களுக்கு 0.0573 இறப்புகளைக் கொண்டுள்ளது" எனத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள பஞ்சாபின் பயன்பாட்டு மருத்துவ அறிவியல் பீடத்தின் மூத்த டீன், "இதுபோன்ற ஒவ்வொரு சிறிய விஷயமும் நமக்கு நம்பிக்கையைக் கொடுத்தாலும் இப்போது எதையும் சொல்வது கடினம். ஆனால் பி.சி.ஜி தடுப்பூசி சார்ஸ் நோய்த்தொற்றுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது. இதைவைத்து குணப்படுத்த முடிந்தது என இல்லையென்றாலும், நோயின் தீவிரத்தை குறைக்க முடிந்தது.

இந்நிலையில் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ள முதல் 50 நாடுகளை ஆய்வு செய்ததில், நீண்ட காலமாக இந்த தடுப்பூசியைப் பயன்படுத்திவரும் நாடுகளில் சுமார் 6 மடங்கு அளவுக்கு கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக காணப்படுகிறது எனத் தெரியவந்துள்ளது. தற்போது அந்த பி.சி.ஜி தடுப்பூசியை கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்த முடியுமா என்பதைக் கண்டறியும் ஆராய்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் 4,000 சுகாதார ஊழியர்களுக்கு பி.சி.ஜி தடுப்பூசி அளிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சாதகமான முடிவுகள் வரும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்" எனக் கூறியுள்ளார்.

காசநோயிலிருந்து பாதுகாப்பதற்காக பிறந்த உடனோ அல்லது அதற்குப் பின்னரோ குழந்தைகளுக்கு வழங்கப்படும் பேசிலஸ் கால்மெட்-குய்ரின் (பி.சி.ஜி) தடுப்பூசி கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு கேம் ஜேஞ்சராக இருக்கலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ள நிலையில், உலகில் அதிக காசநோய் பாதிப்பு கொண்ட நாடான இந்தியா 1948ஆம் ஆண்டு பி.சி.ஜி நோய்த்தடுப்பு மருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.