'கொரோனாவை போலவே மற்றொரு கொடூரம் இது!'... திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Apr 08, 2020 06:46 PM

கொரோனாவின் இறுதி விளைவாக பட்டினிச்சாவுகள் ஏற்பட்டு விடாமல் தடுக்க உரிய திட்டமிடலை அரசுகள் அலட்சியமின்றி மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

dmk leader stalin statement on hunger and inflation covid19

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா நோய்த்தொற்று அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவினைப் பின்பற்றி, தமது வாழ்க்கைக்கான அன்றாடத் தேடலைக் கைவிட்டு, பொதுமக்கள் வீடுகளில் முடங்கியிருக்கிறார்கள். நோய்த்தொற்றிலிருந்து காத்துக் கொள்வது போலவவே, உணவுத் தட்டுப்பாடின்றி காக்கவேண்டியதும் அவசியம்.

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழக்கமாகக் கிடைக்கும் வருமானம் குறைந்துள்ள அல்லது இல்லாத நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. குறிப்பாக, உணவுப் பொருட்களில் துவரம் பருப்பு போன்றவற்றின் விலை 30% உயர்ந்துள்ளது. பூண்டு, மிளகாய் போன்றவற்றின் விலை 100%க்கு மேல் அதிகரித்துள்ளது. புளி, மிளகு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

காய்கறிகளின் விலையேற்றம் கட்டுப்பாடின்றித் தொடர்வதாலும், இறைச்சி விலையும் அதிகரிப்பதாலும் மக்களின் அன்றாட உணவுத் தேவைக்குரிய அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்த விலையேற்றம் இடைத்தரகர்களுக்கும் பதுக்கல்காரர்களுக்கும் கொள்ளை லாபம் அடிக்கவே வழிவகுக்கும்.

இந்த அசாதாரண சூழலைப் பயன்படுத்தி லாப நோக்கத்துடன் செயல்படக்கூடியவர்களைத் தடுத்து நிறுத்தி, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய-மாநில அரசுகளுக்கு இருக்கின்றது.

மேலும், 15 நாட்களாக எவ்வித வருமானமும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருப்பவர்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை விரைவுபடுத்திட வேண்டும். தமிழக அரசு அறிவித்த, குடும்ப அட்டைகளுக்கான நிவாரணம் ரூ.1000 என்பது, 21 நாட்கள் ஊரடங்கு காலத்திற்குப் போதுமானதாக இல்லை.

கொரோனா நோய்த்தொற்று பரிசோதனைகளைப் பெருவாரியான மக்களுக்கு விரைவாக நடத்தி, ஏழை எளிய நடுத்தர மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்வதற்கான நிவாரணத் தொகை - உணவுப் பொருட்களை நியாயமான அளவுக்கு வழங்குவதே மத்திய மாநில அரசுகளின் உடனடி செயல்பாடாக அமைந்திட வேண்டும்.

கொரோனாவைப் போலவே மற்றொரு கொடூரம்தான், பட்டினிச் சாவு. பட்டினிச் சாவைத் தடுப்பதில் அரசுகளின் பணி அதிமுக்கியம். கொரோனாவின் இறுதி விளைவாக, பட்டினிச் சாவுகள் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை அலட்சியம் செய்துவிடாமல், சரியாகத் திட்டமிட்டு இப்போதிருந்தே மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.