'எதிரிக்கு கூட இப்படி ஒரு சாவு வரக்கூடாது'...'வீட்டு வாசலில் கிடக்கும் சடலங்கள்'...'சேகரிக்கும் துப்புரவு பணியாளர்கள்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Apr 08, 2020 04:01 PM

'கொரோனா' இந்த வார்த்தையை யாரும் தங்களின் உயிர் உள்ளவரை மறக்க மாட்டார்கள். அப்படி ஒரு பேரழிவை இந்த ஒற்றை வைரஸ் ஏற்படுத்திவிட்டது. அதற்கு பெரிய உதரணமாக தற்போது நடக்கும் சம்பவங்கள் திகழ்கிறது.

Ecuador : COVID-19 Dead Bodies are being left in the streets

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அந்த நாட்டில் உயிரிழப்புகள் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டு இருக்கிறது. குறிப்பாக, அந்நாட்டின் துறைமுக நகரான குய்யாகு, கொரோனாவின் கோர பிடியில் சிக்கியுள்ளது. ந்நகரில் மட்டும் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதனால் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய மருத்துவ வசதி கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதன்காரணமாக இறந்தவர்களை கல்லறைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய முடியாமல் இறந்தவர்களின் உடல்களை வீதியிலே வீசிவிட்டு செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது. இறந்தவர்களின் உடல்களை அவர்களின் உறவினர்கள், வீட்டின் வாசல் முன்பாக வைத்து அதை ஒரு போர்வையால் போர்த்திவிட்டு போய் விடுகிறார்கள். கடந்த 2 நாட்களில் மட்டும், இப்படி வைத்துவிட்டுப்போன 100 உடல்களை நகர துப்புரவு பணியாளர்கள் மீட்டு உள்ளனர்.

இதைவிடக் கொடுமையின் உச்சமாக, உள்ளூர் ஆஸ்பத்திரி ஒன்றும் இறந்தவர் ஒருவரின் உடலை கொஞ்சமும் மனிதாபிமானமின்றி இதுபோல் தெருவில் வீசியது, தெரிய வந்துள்ளது. இதையடுத்து, நகர நிர்வாகம், ‘வீடுகளில் இறப்பவர்களின் உடல்களை, தடித்த அட்டைகளை பெட்டியாக தயாரித்து அதற்குள் அடைத்து தெருவில் வையுங்கள்’ என வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், உள்ளூர் ஆஸ்பத்திரிகளுக்கு அதிக உடல்களை சேகரித்து வைக்கும் வகையில் 40 அடி நீளம் கொண்ட இரும்பு பெட்டிகளையும் வழங்கி வருகிறது.

கொரோனாவால் உலகமக்கள் படும் வேதனையை உணர்த்த இதைவிட எந்த நிகழ்வும் இருக்க முடியாது என்பது தான் வேதனையின் உச்சம். எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் வந்தாலும், இறந்தவர்களை முறையாக அடக்கம் செய்ய பல வழிகள் இருக்கும். ஆனால் கொரோனா காட்டியிருக்கும் கோர முகம் தான் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் பலரது மனதிலும் அழியாமல் இருக்கும் என்பதே நிதர்சனம்.