‘அனுமன்’, லஷ்மன் உயிரை காப்பாத்த... ‘சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து உதவியதுபோல’... ‘எங்க நாட்டுக்கு ‘அந்த’ மருந்தை தாங்க’... பிரதமர் மோடிக்கு ‘உருக்கமான’ கடிதம் எழுதிய அதிபர்!
முகப்பு > செய்திகள் > உலகம்ராமாயாணம் மற்றும் இயேசுவை மேற்கோள் காட்டி, கொரோனா சிகிச்சைக்காக, ஹைடிராக்ஸி குளோரோகுயின் மருந்தை தருமாறு பிரேசில் அதிபர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த மலேரியாவுக்கு தரப்படும் பழங்கால, அதிக செலவில்லாத ஹைடிராக்சி குளோரோகுயின் மாத்திரை நல்ல பலன் தருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல நாடுகள் இம்மருந்தை பரித்துரைத்து வருகின்றன. உலகிலேயே இம்மருந்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவிலும், இந்திய மருத்துவ கவுன்சில் இந்த மருந்தை பரிந்துரை செய்ததால், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதும், மருந்து இருப்பை உறுதிப்படுத்த ஹைட்ராக்சி குளோரோகுயின், பாராசிட்டமால் உள்ளிட்ட 14 வகையான மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த மாதம் 25-ம் தேதி தடைவிதித்தது.
இந்த மருந்து கிடைக்காமல் அமெரிக்கா, ஸ்பெயின், இலங்கை உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே கேட்டிருந்தபடி மருந்தை தரவில்லை என்றால், அதற்கான பதிலடி இந்தியாவிற்கு தரப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியிருந்தார். இதனை தொடர்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்குவதற்கான தடையை இந்தியா தளர்த்தி உள்ளது.
இந்நிலையில், பிரேசில் அதிபர் ஜேர் போல்செனாரோ, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘பகவான் ஹனுமான், புனித மருந்தான சஞ்சீவி மூலிகை மருந்தைக் கொண்டு வந்து, பகவான் ராமரின் தம்பி லஷ்மணை காப்பாற்றியதுபோல, இயேசுபிரான், நோயுற்றவர்களை குணப்படுத்தி பார்டீமூவுக்கு கண் பார்வை அளித்ததுப் போல, இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களைக் காக்க வேண்டும். தற்போது கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் உலகளாவிய பிரச்சனையை இந்தியாவும் பிரேசிலும் இணைந்து எதிர்கொண்டு வெற்றி பெறும்’ எனத் தெரிவித்துள்ளார்.
