‘அவங்களுக்கு எல்லாம் ஜாஸ்தி’... 'அதிகம் பாதித்த தமிழகத்துக்கு’... ஏன் இவ்வளவு கம்மியா குடுத்தீங்க?’...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 08, 2020 04:44 PM

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்துக்கு ஏன் அதிகமான நிதியை ஒதுக்கவில்லை என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Chennai High Court questions about allocation of covid relief fund

சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்தியா அவேக் பார் டிரான்ஸ்பரன்சி என்ற அமைப்பின் இயக்குனர் ராஜேந்தர் குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘கொரோனா பாதிப்பில் இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கும்போது,  ரூ.510 கோடியை மத்திய அரசு ஒதுக்கியதை சுட்டிக்காட்டினர். பின்னர், கொரோனா தொற்று குறைவாக உள்ள பிற மாநிலங்களுக்கு அதிகமான தொகையை ஒதுக்கிய மத்திய அரசு, தமிழகத்துக்கு ஏன் குறைவாக ஒதுக்கியது’ என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை வழக்கில் தாமாக முன்வந்து சேர்த்து, இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தனர். கொரோனா நிவாரணமாக தமிழக அரசு மத்திய அரசிடம் 9 ஆயிரம் கோடி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.966 கோடியும், மத்தியப்பிரதேசத்திற்கு ரூ.910 கோடியும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் உறவினர்கள் மற்றும் வெளிநாடு சென்று வந்தவர்களின் உறவினர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்மென்றும், அவ்வாறு முன்வர தவறினால் அவர்களை கட்டாயப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.