‘நடுவானில்’... ‘திடீரென முதியவருக்கு ஏற்பட்ட வலி’... ‘கொஞ்சம் கூட யோசிக்காமல்’... 'டாக்டர் செய்த காரியம்'... ‘குவியும் பாராட்டுக்கள்’... வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Nov 22, 2019 01:03 PM

நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த முதியவரின் உயிரை காப்பாற்ற, கொஞ்சம்கூட யோசிக்காமல் மருத்துவர் செய்த செயல் பாராட்டுக்களை அள்ளியுள்ளது. 

Hero doctor sucks urine from old man in mid air on flight

சீனாவின் குவாங்சோ நகரத்திலிருந்து நியூயார்க்கிற்கு கடந்த செவ்வாய்கிழமையன்று, சீனா சதர்ன் விமானம் ஒன்று பறந்துகொண்டிருந்தது. நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் 70 வயது மதிக்கதக்க முதிய பயணி ஒருவருக்கு திடீரென dysuria என்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதாவது சிறுநீர் கழிக்க முடியாமல், சிறுநீர் பையில் அடைத்துக்கொண்டு, கடுமையான வலியால் அந்த முதிய பயணி மிகவும் தவித்து கதறித் துடித்துப்போனார். இதனால் அவரத குடும்பத்தினரும் தவித்தனர்.

அப்போது விமானத்தில் இருந்த மருத்துவர்கள் ழாங் ஹாங் மற்றும் ஜியா ழான்ஜியாங் ஆகியோர் முதியவரின் உடல்நிலையைப் பரிசோதித்தனர். சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவெடுத்த மருத்துவர்கள், விமானத்தில் இருந்த முதலுதவி பொருட்களான ஆக்ஸிஜன் சிலிண்டர், சிரிஞ்ச் மற்றும் பிளாஸ்டிக் ஸ்ட்ரா ஆகியவற்றைக் கொண்டு சிறுநீரை வெளியேற்றும் ஒரு அமைப்பை உருவாக்கினர். அளவுக்கதிகமான சிறுநீர் இருந்ததால், இதை மட்டும் வைத்து அவரது சிறுநீரை வெளியேற்ற முடியவில்லை.

சிறுநீர் வெளியேறினால் மட்டுமே முதியவரை காப்பாற்ற முடியும் என்ற சூழலில், யாரும் எதிர்பார்க்காத அந்த செயலை செய்தார் ழாங் ஹாங் மருத்துவர். நோயாளிக்குப் பொருத்தப்பட்டிருந்த குழாயின் மூலம் கொஞ்சம் கூட யோசிக்காமல், தனது வாயால், தானே சிறுநீரை உறிஞ்சி பக்கத்தில் இருந்த கோப்பையில் துப்பினார். சுமார் 800 மில்லி சிறுநீரை, கிட்டத்தட்ட 37 நிமிடங்கள் போராடி வெளியேற்றினார் அந்த மருத்துவர். நீண்ட நேரம் நடந்த இந்த சிகிச்சைக்குப் பிறகு முதியவர் இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

இதனால் அவரின் உயிர் இழப்பு தடுக்கப்பட்டது.  இதுகுறித்து கேட்டபோது, ‘ஒரு மருத்துவருக்கு, மக்களை காப்பாற்றுவதே முதல் வேலை என்றும், அப்போது வேறு எதை பற்றியும் தன்னால் யோசிக்க முடியவில்லை’ என்றும், கொஞ்சம் கூட யோசிக்காமல் செய்த காரியத்தை, கொஞ்சம் கூட அலட்டிக்காமல் பதில் தந்துள்ளார் மருத்துவர் ழாங் ஹாங். இவரின் இந்த துரித செயலுக்கு நெட்டிசன்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags : #MAN #FLIGHT