'அப்ப சாதாரண ஊழியர்'.. 'இப்ப ரத்தன் டாடா தோள் மேல கை போடுற அளவுக்கு'.. நெகிழும் இளைஞர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 22, 2019 12:55 PM

இந்தியாவின் முன்னணி நிறுவனரும், பணக்காரரும், தொழிலதிபருமான ரத்தன் டாடாவின் கீழ் பணிபுரிய வேண்டும் என்பது பலரது கனவாகவே இருந்து வரும் சூழலில், அதே கனவுடன் சுற்றித் திரிந்த மும்பையைச் சேர்ந்த 27 வயது இளைஞரான சாந்தனு நாயுடு என்பவருக்கு ரத்தன் டாடாவே போன் செய்து தன்னுடைய உதவியாளராக நியமித்துள்ளார்.

27 yrs old youth shares his experience with Ratan Tatas

ஹூமன்ஸ் ஆஃப் பாம்பே எனும் மும்பை இதழில் சாந்தனு நாயுடு பற்றிய கதையை அவரே கூறுவதாக வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதன்படி,  2014-ஆம் ஆண்டு பட்டப் படிப்பு முடித்த சாந்தனு டாடா குழுமத்தில் ஊழியராக இருந்துவந்தபோது தெருநாய்கள் அடிபட்டு இறந்து கிடப்பதைப் பார்த்து பதறியுள்ளார். அப்போது அவருக்குத் தோன்றியதுதான் நாய்களின் கழுத்தில் ஒளி எதிரொளிப்பு பெல்ட் ஒன்று கட்ட வேண்டும் என்கிற யோசனை. நண்பர்களுடன் சேர்ந்து யதார்த்தமாக இதனைத் தொடங்கிய அவரிடம் ஏகப்பட்ட ஆர்டர்கள் குவிந்தபோது, அவருக்கு தொழில் ரீதியான, பொருளாதார ரீதியான உதவி தேவைப்பட்டது. அதன் பின்னர் தனது தந்தையின் அறிவுரையின் பேரில் ரத்தன் டாடாவுக்கு நீண்ட தயக்கத்துக்கு பின் உதவி கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

அவரே எதிர்பாராத வகையில் அவருக்கு மறு கடிதம் எழுதியது மட்டுமல்லாது தன்னுடன் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, தனது நாய்களின் கழுத்திலும் ஒளி எதிரொளிப்பு பெல்ட் இருப்பதைக் காட்டி நெகிழவைத்தார். அதன் பின்னர் பல்வேறு ஆலோசனைகளையும் சாந்தனுவுக்கு ரத்தன் வழங்கினார். பின்னர் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்று திரும்பியவுடன் சாந்தனுவுக்கு ரத்தன் டாடாவே போன் செய்து தனக்கு உதவியாளராக வர முடியுமா? என்று கேட்டு நியமித்துள்ளார். ஒரு நல்ல நண்பன், திறமையான வழிகாட்டி, சரியான பாஸ் என்ற 3 பேர் ஒரு இளைஞருக்கு அவசியம் என்றால், அந்த 3 பேராகவும் ரத்தன் டாடா ஒருவரே தனக்கு கிடைத்தது தன் பாக்கியம் என சாந்துனு நெகிழ்ந்துருகி பேசியுள்ளார்.

Tags : #RATANTATA