அமெரிக்கா அறிமுகம் செய்யும் புதிய விசா.. யாருக்கு சாதகம்.. நிறுவனங்கள் செம்ம ஹேப்பி
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் கொண்டுவரப்பட்ட கடுமையான குடியுரிமைச் சட்டங்களை, புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் திருத்தி அமைத்துக் கொண்டிருக்கிறார். தேர்தல் பரப்புரையில் அளித்த வாக்குறுதியின் படி முறையான ஆவணங்கள் இன்றி, அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து அங்கு வசித்து வரும் 1.10 கோடி பேருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், புதிய குடியுரிமைச் சட்டத்தின் மூலம், உரிய ஆவணங்களுடன் குடியுரிமை வழங்கப்பட்டு ஆண்டுதோறும் அமெரிக்காவின் குடிமக்களாக மாற்றப்படுபவர்களின் எண்ணிக்கை சுமார் 95,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோன்று இந்தியர்களுக்கு நன்மை தரும் செய்தியாக H-1B விசா கொண்டிருப்பவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கும் ஏற்பாடு அல்லது அதற்கான 6 ஆண்டுகள் கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனா உள்பட உலக நாடுகளை மிஞ்சும் வகையில் நாட்டின் பொருளாதாரத்தை புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவை மூலம் வலுப்படுத்த ஸ்டார்ட்அப் விசா அளிக்கும் அமெரிக்க போட்டிகள் சட்டம் 2022 மசோதா, பிரதிநிதிகள் சபையில் ஜோ பைடன் அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில், குடியுரிமை மற்றும் நாட்டுரிமை சட்டத்தில் டபிள்யூ என்று புதிய பிரிவு குடியுரிமை இல்லாத ஸ்டார்ட்அப் தொழில் தொடங்கும் நிறுவனத்தின் முக்கிய ஊழியர், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஸ்டார்ட்அப் விசா வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த 25ம் தேதி தாக்கல் செய்த மசோதா விதிகளின்படி, ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கி, சட்டப்பூர்வ, நிரந்தர குடியுரிமை கோரி சுயமாக விண்ணப்பிக்கும் தொழில்முனைவோரை அனுமதிக்கும் விதிமுறைகளை உருவாக்கும்படி உள்துறை அமைச்சகத்தின் செயலருக்கு இந்த மசோதா வழிகாட்டுகிறது.
இந்த புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அதன் வளர்ச்சி அடிப்படையில் டபிள்யூ-1, டபிள்யூ-2 என்ற விசா பிரிவுகளின் கீழ் முதல் 3 ஆண்டுகளும் பிறகு 8 ஆண்டுகள் வரை நீட்டித்து கொள்ளலாம். இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.