10 நிமிடங்களுக்கு 'ஒருவர்' பலி... ஈரானை துயரத்தில் 'ஆழ்த்திய' கொரோனா... வேகமாக பரவுவதற்கு 'காரணம்' இதுதானாம்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஈரானில் வெகு வேகமாக பரவும் கொரோனவால் ஏராளமான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை அந்நாட்டில் கொரோனா தாக்குதலுக்கு 1685 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். 21,638 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். சீனா, இத்தாலியை அடுத்து ஈரான் நாட்டை கொரோனா ஆட்டிப்படைத்து வருகிறது. அங்கு 10 நிமிடத்துக்கு ஒருவர் கொரோனாவால் இறப்பதாகவும், 1 மணி நேரத்துக்கு 50 பேர் பாதிக்கப்படுவதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஈரான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. இதில் முதன்மை காரணமாக அமெரிக்கா, ஈரான் மீது விதித்த பொருளாதார தடையை கூறுகின்றனர். இதனால் ஈரான் மக்கள் மருத்துவ உதவிகள், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். மேலும் அங்கு மருத்துவ பணியாளர்களும் குறைவாகவே உள்ளனர். மருத்துவ பரிசோதனை நிலையங்கள் போதுமான அளவில் இல்லை.
மாஸ்க்குகள், சானிடைசர்கள், கையுறைகள் உள்ளிட்ட பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தான் ஈரானால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இவை அனைத்தையும் விட பெரும் உயிர்ப்பலி ஏற்பட்டும் அந்த மக்கள் நிலைமையை சீரியஸாக எடுத்துக் கொள்ளாததே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அந்த நாட்டு மக்கள் பொது இடங்களில் கூடுவதை இன்னமும் தவிர்க்கவில்லையாம். இதனால் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
