இரண்டு நாளாக 'உணவில்லை'... நடுரோடுகளில் 'இறக்கி' விடப்படும் அவலம்... உச்சகட்டமாக 'குழந்தையுடன்' இருந்த குடும்பத்துக்கு தங்குமிடம் மறுப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 19, 2020 12:31 AM

இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்றால் 24 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அம்மாநில அரசு தற்போது தடை விதித்துள்ளது. ஆனால் ஏற்கனவே அங்கு இருக்கும் வெளிநாட்டு மக்கள் கசப்பான சம்பவங்களை சந்திக்க ஆரம்பித்து இருக்கின்றனர்.

Coronavirus: Humanity is Important Says Pinarayi Vijayan

இதுகுறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கவலை தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர், ''யாரும் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. உணவு இல்லாமல் வெளிநாட்டு பயணிகள் 2 நாள்கள் அலைந்துள்ளனர். குழந்தையுடன் இருந்த ரஷ்ய குடும்பம் ஒன்றுக்கு தங்குமிடம் மறுக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற செயல்கள் வெட்கத்துக்கு உரியவை. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தற்போதைய சூழல் நிரந்தரமானது அல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக மனிதநேயம் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்,'' என தெரிவித்து இருக்கிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் தம்பதிக்கு உள்ளூர் மக்களால் தங்குமிடம் மற்றும் உணவு மறுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அறிந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பரிசோதனையில் அவர்களுக்கு வைரஸ் இல்லை என்பது உறுதியானவுடன் அவர்கள் இங்கிலாந்து திரும்பி சென்றுள்ளனர். இதேபோல கோட்டயம் பகுதியில் இரண்டு பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் திங்களன்று கொச்சிக்குச் செல்லும் வழியில் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளனர்.

பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்றாலும் அவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கின்றனர். இதுபோன்ற செயல்கள் பின்னாளில் கேரள சுற்றுலாத்துறையை முழுமையாக பாதிக்கும் என்பதால் முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.