‘கேரளா போய்ட்டு வந்த பெண்’.. ‘திடீர் காய்ச்சல், தொண்டை வலி’.. கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பெண்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் இரண்டு பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் பங்களா டிவிசன் பகுதியை சேர்ந்தவர் கமலம் (58). இவர் அப்பகுதியில் உள்ள எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்றுமுன்தினம் வால்பாறை திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை திடீரென உடல்நிலை சரியில்லாமல் கமலம் சோலையார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு கமலத்தை பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகித்தனர்.
இதனால் கமலத்துக்கு பாதுகாப்பு கவச உடை அணிவித்து சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆர்.ஆர். தியேட்டர் சாலையை சேர்ந்தவர் கோபால். இவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.இவரது மகள் மகாலட்சுமி (22). இவர் கடந்த வாரம் ஹைதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு பொள்ளாச்சி திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் மகாலட்சுமிக்கு திடீர் காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட்டதால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு மகாலட்சுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கலாம் என சந்தேகித்தனர். இதனை அடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். கமலம் மற்றும் மகாலட்சுமியின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவுகள் வந்த பிறகுதான் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
