பலி எண்ணிக்கை அதிகரிப்பால்... 'பிணப்பைகளுக்கு' கடும் தட்டுப்பாடு... 'ஆம்புலன்ஸ்' டிரைவர்கள் கடும் அச்சம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Apr 14, 2020 01:36 AM

கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், லண்டனில் பிணப்பைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.

Coronavirus: Body-bag stocks \'in danger of running out\'

உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா இங்கிலாந்தையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக லண்டனில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு பிணப்பைக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.

இதற்குமுன் கொரோனாவுக்கு பலியானோரின் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஆம்புலன்ஸ் வேனில் டிரைவர்கள் எடுத்துச்செல்லும்போது ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறைகளில் அவர்களுக்கு இதுவரை பிளாஸ்டிக் பிணப்பைகள் வழங்கப்பட்டு வந்தன. இதில் உடலை மூட்டைபோல் எளிதில் கட்டி விடலாம். ஆனால் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து 2 பிளாஸ்டிக் விரிப்புகளை வழங்க ஆரம்பித்தனர். தற்போது இது ஒன்றாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

இது ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.இதனால் தங்களுக்கும் கொரோனா ஏற்பட்டு விடுமோ என்று அவர்கள் அச்சப்பட ஆரம்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. உச்சகட்டமாக ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் வீடியோ வெளியிட்டு புலம்பி இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து லண்டனில் அடக்கஸ்தலங்களை நிர்வகிக்கும் உயிரிழந்தோருக்கான மேலாண்மை ஆலோசனைக் குழு, ''பிணங்களை அகற்றுவதற்கு ஒரு சாதாரண படுக்கை விரிப்பை மட்டுமே ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு கொடுப்பது மிகுந்த அபாயத்தை ஏற்படுத்தும்.எனவே இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுங்கள்'' என்று அந்நாட்டின் பொது சுகாதாரத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.