'இனிமேல் குண்டர் சட்டம் தான்'...'இந்த மோசமான காரியத்தை செய்யாதீங்க'...காவல்துறை எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 13, 2020 09:24 PM

பணியில் இருந்த டாக்டர்கள் மீது கொரோனா நோயாளி எச்சில் துப்பிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

CoronaVirus : People who assault duty doctors, punish under Goondas

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ள நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் மருத்துவமனையில் தன்னலமற்று பணியாற்றி வருகிறார்கள். மறுபுறம் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் என அரசு அதிகாரிகள் பம்பரமாக சுழன்று பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளி, மருத்துவர்கள் மீது எச்சில் துப்பி முக கவசத்தை வீசிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து 3 கொரோனா நோயாளிகள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முக்கிய வருண் குமார் ஐ.பி.எஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''கொரோனா நோய் தொற்று தடுப்பு பிரிவில் பணிபுரிந்து வரும், மருத்துவர்கள், செவிலியர்கள் குறித்து அவதூறாக பேசினாலோ, அல்லது அவர்களை தாக்கினாலோ அல்லது அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தாலோ, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும்'' என கடுமையாக எச்சரித்துள்ளார்.