அமெரிக்க 'வரலாற்றில்' முதல்முறையாக... '50 மாகாணங்களும்'... அதிபர் 'டிரம்ப்' வெளியிட்டுள்ள 'அறிவிப்பு'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களும் பேரழிவுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

உலக அளவில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக உள்ள அமெரிக்கா உயிரிழப்பிலும் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 5 நாட்களுக்கு முன்பாக 10 ஆயிரமாக இருந்த பலி எண்ணிக்கை தற்போது 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நியூயார்க் மாகாணம் முதல்முதலாக பேரழிவு மாகாணமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு மாகாணங்களாக பேரழிவு மாகாணங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு வந்தன. கடைசியாக வியோங் மாகாணத்தையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேரழிவு மாகாணமாக அறிவித்ததையடுத்து, அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக அனைத்து 50 மாகாணங்களும் பேரழிவு மாகாணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் இயற்கைப் பேரழிவுகள், பயங்கரவாதத் தாக்குதல் போன்றவற்றின்போது ஒரு சில மாகாணங்கள் பேரழிவுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போதுதான் முதல்முறையாக 50 மாகாணங்களும் பேரழிவு மாகாணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துப் பேசியுள்ள அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், "அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக அனைத்து மாகாணங்களும் அதிபரின் பேரழிவுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கண்ணுக்குத் தெரியாத எதிரியுடனான போரில் நாம் வெற்றி பெற்று வருகிறோம். விரைவில் முழுவதுமாக வெற்றி பெறுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
