எங்களுக்கு 'குடிமகன்'கள் தான் முக்கியம்... 'ஊரடங்கு' தளர்வுக்கு 'முன்பே'... 'மதுக்கடைகளை' ஓபன் செய்தது 'அசாம் அரசு'... 'குஷியில் மதுபிரியர்கள்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கு தளர்வுக்கு முன்பே அசாம் மாநிலத்தில் மதுக்கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், மாநில அரசுகள் சார்பில் ஊரடங்கு உத்தரவை மேலும் 2வாரங்களுக்கு நீட்டிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி மாநில முதலமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் மத்திய அரசு சார்பில் இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. நாட்டு மக்களிடம் நாளை காலை பிரதமர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, பஞ்சாப், ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தனிச்சையாக ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன. ‘இந்நிலையில், ஊரடங்கு தளர்வுக்கு முன்பே அசாம் மாநிலத்தில் மதுக்கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மது கிடைக்காத விரக்தியில் மது பிரியர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். மாற்று போதைக்கு ஆசைப்பட்டு உயிரிழக்கும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. இதை கருத்தில் கொண்டு அசாமில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே மதுக்கடைகள் திறக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மேகாலயா அரசு, இன்று முதல் 4 நாட்களுக்கு மட்டும் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. அசாம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்து குறிப்பிடத்தக்கது.