'பியர்ல் ஹார்பர்', 'ட்வின் டவர்' தாக்குதல்... 'இதுக்கு முன்னாடி ஒண்ணுமே இல்லை...' 'மனம் வெதும்பிய டொனால்ட் ட்ரம்ப்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 07, 2020 07:51 AM

பியர்ல் ஹார்பர் தாக்குதல், இரட்டை கோபுரம் தாக்குதலை விட மோசமானது கொரோனா வைரஸ் நெருக்கடி என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Corona crisis is Worse than Pearl Harbor, twin tower attack

கொரோனா வைரசால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்காதான். அந்நாடு தினமும் கொரோனா வைரசுக்கு ஆயிரக்கணக்கானோரை பலி கொடுத்து வருகிறது.

அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஏற்படுகிற உயிர்ப்பலி 74 ஆயிரம் என்ற எண்ணிக்கையை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அங்கு 12 லட்சத்து 63 ஆயிரம் பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் அமெரிக்காவில் 2 ஆயிரத்து 528 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் அந்நாடு உயிரிழப்புகளை மட்டுமின்றி பொருளாதார பாதிப்பையும் சந்தித்து வருகிறது. இதனால் ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்தி, பொருளாதார நடவடிக்கைகளை பல மாகாணங்களும் முடுக்கி விட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் நெருக்கடி பியர்ல் ஹார்பர் தாக்குதல் மற்றும் இரட்டை கோபுரம் தாக்குதலை விட மோசமானது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் போது, 1941 ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ஹவாய்த் தீவில் இருந்த அமெரிக்க கப்பற்படை தளமான பியர்ல் துறைமுகம் மீது ஜப்பானியக் கப்பற்படைத் தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்து 402 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். 1282 பேர் காயமடைந்தனர்.

இதேபோல் அல்கைதா அமைப்பினர் 2001ம் ஆணடு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள உலகின் மிக உயரமான இரட்டைக் கோபுரத்தின் மீது நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இந்த நெருக்கடிகளிலிருந்து பின்னாளில் அமெரிக்க மீண்டும் எழுந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது போர்த் தொடுத்து வெற்றியும் பெற்றது.

ஆனால் இவற்றையெல்லாம் விட தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவை நிலைகுலையச் செய்துள்ளது.

இதுதொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவல் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் நடந்த பியர்ல் ஹார்பர் தாக்குதல் மற்றும் இரட்டை கோபுரம் தாக்குதல் சம்பவத்தை விட மிக மோசமானது கொரோனா வைரஸ் நெருக்கடி என குறிப்பிட்டுள்ளார்.