கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக... இந்தியாவுக்கு நிதியுதவி!.. அமெரிக்கா அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா தீவிரமாகப் போராடி வரும் நிலையில், அந்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கூடுதலாக 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் (ரூ.22.50கோடி) உதவி அளிக்கப்படும் என அமெரிக்காவின் யுஎஸ்எய்ட் தெரிவித்துள்ளது

ஏற்கெனவே கடந்த 6-ம் தேதி 29 லட்சம் (21 கோடி ரூபாய்) டாலர்கள் உதவி வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கொரோனா வைராஸ் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 50 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் ஆயிரத்தைக்கடந்து 1,074 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசும் மாநில அரசுகளும் தீவிரமாக தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் பரவல் இருந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கூடுதலாக 30 லட்சம் டாலர்கள் நிதி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் வெளியி்ட்ட அறிக்கையில் , "கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவின் போராட்டத்தை வலுப்படுத்த கூடுதலாக 30 லட்சம் டாலர்கள் உதவி வழங்கப்படும். இதன் மூலம் இந்தியா, அமெரிக்கா இடையிலான நட்புறவும் வலிமையடையும். இதுவரை இந்தியாவுக்கு 59 லட்சம் டாலர் உதவி கோவிட்-19 எதிரான போராட்டத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்த உதவியின் மூலம் இந்தியா கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல சிகிச்சையும், மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு செய்திகளும் வழங்க முடியும். கொரோனா நோயாளிகள் குறித்த ஆய்வையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தலாம். மேலும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் ஏழைகளுக்கு மருத்துவ உதவி கிடைக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
