"என் பேரை பிரிண்ட் பண்ணி குடுங்க..." 'நிவாரணம்' வழங்குவதில் 'அரசியல்' செய்யும் 'ட்ரம்ப்'... 'கடுப்பான அமெரிக்க மக்கள்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 16, 2020 08:05 PM

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி காசோலையில், அதிபர் ட்ரம்ப் தனது பெயரை பொறிக்க வேண்டும் என உத்தரவிட்டிருப்பது அமெரிக்க மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trump\'s name in government relief ordered; Americans protest

கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக அமெரிக்கா மாறியுள்ளது. அங்கு இதுவரை, 6 லட்சத்து 45 ஆயிரம பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 28,623 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, தொற்சாலைகளும் தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், கடந்த மாதம் மட்டும் அமெரிக்காவில், 1.6 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் அடுத்த வேளை உணவுக்கு வழியற்ற நிலையை அடைந்துள்ளனர்.

இதனால் பேரிடர் காலங்களில் கடைப்பிடிக்கப்படும் உணவு விநியோக மையங்களை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமெரிக்க அரசு திறந்துள்ளது. இதில் உணவு வாங்குவதற்காக கிலோமீட்டர் கணக்கில் மக்கள் தங்கள் கார்களில் காத்திருக்கும் அவல நிலையும் அங்கு நிலவி வருகிறது.

இப்படி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவை மீட்டெடுக்க, கடந்த மாதம் இரண்டு ட்ரில்லியன் டாலர்கள் நிவாரண தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

'நிதியுதவிக்கான காசோலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பெயர் பொறிக்கப்பட வேண்டும்' என, நேற்று இரவு டிரம்ப் உத்தரவிட்டார். அமெரிக்காவில் மைய அரசினால் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தில் அமெரிக்க அதிபர் ஒருவரின் பெயர் பொறிக்க உத்தரவிடப்படுவது இதுவே முதல் முறையாகும். ஆனால் இதற்கு அமெரிக்க கருவூல அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய செயல்பாட்டால், மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தனக்கே அதிகாரம், தான் மட்டுமே மக்களைக் காப்பவன் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்க டிரம்ப் முயற்சிப்பதையே இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன என பல்வேறு அரசியல் நோக்கர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.