'அவங்க போராடி ஜெயிச்சிருக்காங்க...' 'இந்த விஷயத்துல அவங்கள பார்த்து கத்துக்கணும்...' உலக சுகாதார நிறுவனத்தால் மீண்டும் கடுப்பான அமெரிக்கா...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸை கட்டுப்படுத்திய சீனாவை பார்த்து அனைத்து உலக நாடுகளும் கற்றுக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ள செய்தி சீனாவிற்கு எதிரான நாடுகளை மேலும் சீண்டும் வகையில் அமைந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனாவே காரணம், மேலும் இந்த வைரஸ் சீனாவின் ஒரு ஆய்வகத்திலிருந்து தான் பரவியுள்ளது என நாளுக்கு நாள் சரமாரியான சந்தேகங்களை எழுப்பியும், WHO அமைப்பை குற்றம் சாட்டியும் வருகிறார்.
மேலும் கடந்த வியாழனன்று, மத்திய சீன நகரமான வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் ஐ.நா.வின் சுகாதார அமைப்பை சீனாவுக்கான மக்கள் தொடர்பு நிறுவனத்துடன் ஒப்பிட்டுள்ளதால், WHO "வெட்கப்பட வேண்டும்" என்று டிரம்ப் தெரிவித்தார்.
அதை தொடர்ந்து, கொரோனா வைரஸ் மீது உலக சுகாதார அமைப்பின் பங்கு குறித்து டிரம்ப் நிர்வாகம் ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், WHO அமைப்பிற்கு தரும் நிதி உதவியையும் அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் WHO அமைப்பின் தொழில்நுட்ப முன்னணி அதிகாரி மரியா வான் கெர்கோவ், ஜெனீவாவில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்ட செய்தி சீனாவிற்கு எதிரென்ன நாடுகளை மேலும் கடுப்பில் ஆழ்த்தும் வகையில் இருந்தது.
செய்தியாளர்களின் சந்திப்பில் அவர் கூறியுள்ளதாவது, சீனாவில் தற்போது எவ்வித புது நபருக்கு கொரோனா தொற்று இல்லை. இது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி ஆகும். மேலும் கொரோனா முதலில் பரவிய வுஹானிலும் கொரோனா பாதித்த நோயாளிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் இந்த சாதனைக்கு மிக பெரிய வாழ்த்துக்கள். மேலும் உலக நாடுகள் அனைத்தும் சீனாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் எம்மாதிரியான நடவடிக்கைளை மேற்கொண்டனர், தற்போது எவ்வாறு அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர் என்பதையெல்லாம் அனைவரும் கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வுஹானில் சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமல்ல, தங்கள் வீடுகளில் தங்கியிருக்கும் நபர்களும், பொது சுகாதார நடவடிக்கைகளை கடைபிடித்தவர்களையும் தான் பாராட்டுவதாக வான் கெர்கோவ் கூறினார்.
மேலும் ஹூபே மாகாணதிலும், அதன் தலைநகரான வுஹானிலும் கடந்த ஏப்ரல் 4 முதல் தொடர்ச்சியாக 28 நாட்கள் புதிய கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எவரும் இல்லை என சீன சுகாதார ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
அதுமட்டும் இல்லாமல் பிப்ரவரியில் சீனாவில் கொரோனோவின் ஆதிக்கம் அதிகமான சமயத்தில் கால ஆய்வுக்காக சீனாவிற்கு சென்ற WHO அமைப்பின் நிபுணர்களின் ஒருவரான வான் கெர்கோவ், கூறும் போது“சீனா கொரோனா பரவலை கட்டுப்படுத்த அயராது கடினமாக உழைத்தது” என கூறியுள்ளார்.
மேலும் 'நான் சீனாவில் இருந்த 2 வாரங்களில், வெவ்வேறு துறைகளின் அதிகாரிகள், அமைச்சரக அதிகாரிகள், மருத்துவ ஊழியர்கள் என அனைத்து துறையினரும் அர்ப்பணிப்புடன் வேலை செய்ததை நான் பார்த்தேன். அவர்கள் அனைவரும் கொரோனா தொற்று எண்ணிக்கையை குறைக்க பாடுபட்டு போராடி வென்றுள்ளனர்' என கூறினார்.
மேலும் இனியும் சீனாவில் புது கொரோனா தொற்று நபர் ஏற்படாதவாறு மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
