‘சொந்தமாக்கி கொள்ள முயற்சி செய்கிறது’... ‘சீனாவுக்கு பகிரங்கமாக’... ‘எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் பிரச்சனையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்கமாக சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஈரமான விலங்குகள் சந்தையில் வௌவால்களிடம் இருந்துதான் கொரோனா பரவியதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் புகழ்பெற்ற நாளேடான தி வாஷிங்டன் போஸ்ட், தி ஃபாக்ஸ் நியூஸ் சேனல் ஆகியவை ரகசியமாகச் சேகரித்த செய்திகளின் அடிப்படையில் சார்ஸ்-கோவிட்-19 வைரஸ் வௌவால்களிடம் இருந்து பரவவில்லை. அது சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் சீன அரசின் ஆய்வகங்களிலிருந்து கவனக்குறைவாகக் கையாண்டதால் பரவியுள்ளது எனச் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த செய்தி வெளியானதிலிருந்து அதிபர் ட்ரம்ப் அதிருப்தியான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கொரோனா வைரஸை சீனா கையாண்ட விதம் எங்களுக்கு மிகுந்த அதிருப்தி அளிக்கிறது. எந்த விதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை, அமெரிக்கா சார்பில் எந்தவிதமான தகவல் கேட்டாலும் வழங்கவில்லை.
கொரோனா வைரஸ் பரப்பலை தெரிந்தேதான் சீனா பரப்பியது என்று கண்டுபிடிக்கப்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். கடந்த 1917-ம் ஆண்டுக்குப்பின் அமெரிக்காவில் இதுபோல் யாரும் உயிரிழப்பைச் சந்தித்தது இல்லை. சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நட்பு நல்லவிதமாகத்தான் இப்போதுவரை இருக்கிறது. ஆனால் இதுபோன்ற விஷயங்களைக் கேட்டபின் திடீரென மிகப்பெரிய மாற்றம் இருக்கிறது. சீனா மீது கோபமாக இருக்கிறீர்களா எனக் கேட்கிறீர்கள். என்னுடைய பதில் ஆம்.
ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள் தெரியாமல் செய்யும் தவறுக்கும், நம்மை மீறி நடப்பதற்கும், வேண்டுமென்றே ஒரு தவறைச் செய்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது உங்களுக்குத் தெரியும். சீனாவுக்கும், அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் ஜோ பிடனுக்கும் இடையே நல்ல நட்புறவு இருக்கிறது. ஒருவேளை அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வென்றால், அமெரிக்காவை சீனா சொந்தமாக்கிவிடும். இப்போதுவரை உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை நாங்கள் வைத்திருக்கிறோம். எங்கள் பக்கத்தில் கூட சீனா வர முடியாது.
அதேபோல கொரோனா வைரஸ் உயிரிழப்பில் அமெரிக்காதான் முதலிடத்தில் இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால்,நிச்சயம் நாங்கள் முதலிடத்தில் இருக்க முடியாது. சீனாதான் முதலிடத்தில் இருக்கும். வூஹானில் கொரோனா உயிரிழப்புகளை சீனா திருத்தி வெளியிடுகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது உண்மையான உயிரிழப்பு அதிகமாக இருக்கும். ஆனால், சீனாவின் அதிகாரப்பூர்வ அறிக்கை அதை மறைக்கிறது’ என்று கடுமையாகப் பேசியுள்ளார்.