‘உண்மையா கொரோனா வைரஸ்’... ‘எங்கிருந்து வந்ததுச்சுனு சொல்லுங்க’... ‘அப்பத்தான் எல்லோருக்கும் நல்லது’... ‘சீனாவிடம் ஆதாரம் கேட்கும் நாடு’!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது குறித்து உண்மைத் தகவல்களை சீனா ஒளிவு மறைவின்றி வெளியிட வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.
வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியதாக பாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் வெளியிட்டிருந்தன. மேலும், வூஹான் ஆய்வகத்திலிருந்து, கட்டுப்பாடுகளை மீறி இறைச்சி சந்தைக்கு, வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நபரால் இந்த வைரஸ் உலக அளவில் மற்றவர்களுக்கு பரவியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது எனவும் கூறியிருந்தது. இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், ‘ வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் வைரஸ் பரவியதா என்பது குறித்து அமெரிக்கா விசாரணை நடத்தி வருகிறது. அதைப்பற்றி அதிகம் விவாதிக்க வேண்டாம்’ என்றார்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், மைக் போம்பியோவிடம் கேட்கப்பட்டபோது, அவர் கூறியதாவது, ‘சீனாவில் வைரஸ் பாதிப்பு துவங்கிய உடனேயே, அதற்கு உதவுவதற்கு தயாராக இருந்தோம். எங்களுடைய விஞ்ஞானிகளை வூஹான் ஆய்வகத்தில் ஆய்வு செய்ய அனுமதிக்கும்படி கேட்டோம். ஆனால் அதற்கு, சீனா அனுமதிக்கவில்லை. இந்த வைரஸ் விவகாரத்தில், சீனா வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை. தகவல்களை மறைத்துள்ளது.
கொரோனா வைரஸ், வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் தோன்றியுள்ளது என்பதை அனைவரும் அறிவர். இந்த வைரஸ் தொற்று எவ்வாறு பல்லாயிரக் கணக்கானோருக்கு பரவியது எப்படி என்பதை சீனா விளக்க வேண்டும். வெளவால்களிடமிருந்தே இந்த வைரஸ் உருவாகியிருப்பதாக சீனா ஏன் சொல்கிறது என்பதையும் தெளிவாக்க வேண்டும். இந்த விவகாரத்தில், சீனாவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கொரோனா குறித்து சீனா ஒளிவு மறைவின்றி வெளியிடவேண்டும். கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்று தெரிந்தால் தான் நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் நோய் பரவினால் தடுப்பதற்கும் உதவியாக இருக்கும்’ என்று கூறினார்.