'ஏம்பா... ஏதோ ட்ரம்ப் மாத்திரையாம்ல!?'.. மருந்துக்கடையை 'கார்னர்' செய்யும் மக்கள்!.. திக்குமுக்காடும் ஊழியர்கள்!.. என்ன நடந்தது?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Apr 23, 2020 12:52 PM

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்த பிரசாரத்தால், மருந்துக்கடைகளில் 'ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை கேட்டு, தொல்லை செய்வோர் அதிகரித்துள்ளனர். நல்லவேளையாக, அரசு இந்த மாத்திரை விற்பனைக்கு, கட்டுப்பாடு விதித்துள்ளது.

demand rises for hcq as people seek for it quoting trump

கொரோனா சிகிச்சையில் 'ஹைட்ராக்சிகுளோரோகுயின்' என்ற மாத்திரையை பயன்படுத்தலாம் என்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் அறிவித்தார். இந்தியாவில் தான் இந்த மாத்திரையின் உற்பத்தி அதிகம். எனவே, உள்நாட்டு தேவை கருதி மத்திய அரசு அதன் ஏற்றுமதிக்கு தடை விதித்ததும், அதற்கு மிரட்டல் விடும் வகையில் ட்ரம்ப் பேசியதும், பரபரப்பு செய்தியாகின. கடைசியில், மத்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் தடையை விலக்கி, ஏற்றுமதி செய்ததும், அதற்கு ட்ரம்ப் நன்றி தெரிவித்ததும், இந்த மாத்திரையின் டிமாண்டை தாறுமாறாக அதிகரித்து விட்டது.

இதனால், இத்தனை காலமாக மலேரியா காய்ச்சல், முடக்குவாதம் ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே தரப்பட்டு வந்த இந்த மாத்திரை, இப்போது கொரோனா தடுப்புக்கான பிரதான மருந்தாகி விட்டது. இவ்வாறு டிரம்ப் புண்ணியத்தில் பிரபலமான அந்த மாத்திரையை கேட்டு, மருந்துக்கடைகளுக்கு படையெடுப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா பீதியில் இருப்போர் பலரும், மருந்துக்கடைகளில், இந்த மாத்திரையை கேட்டு நச்சரிப்பதாக, ஊழியர்கள் புலம்புகின்றனர். டாக்டர்களின் பரிந்துரைப்படி, பரிந்துரைத்த அளவுகளில், 'ஆன்டிபயாடிக்' சேர்த்து தான் இம்மாத்திரை சாப்பிட வேண்டியிருக்கும். இந்த மாத்திரை, பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது. இந்த விவரம் தெரியாமல் பலரும், மருந்துக்கடைகளில், இந்த மாத்திரையை பெற முயற்சிக்கின்றனர்.

கோவையை சேர்ந்த மருந்துக்கடை நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'அமெரிக்க அதிபரே கூறி விட்டார் என்பதால், பலரும் இந்த மாத்திரையை வாங்கி சாப்பிட்டு விடலாம் என்று முயற்சிக்கின்றனர். இவ்வாறு மாத்திரை கேட்டு வரும் பலருக்கும், ஹைட்ராக்சி குளோரோகுயின் என்ற பெயர் கூட, சரியாக தெரிவதில்லை. டிரம்ப் குறிப்பிட்ட மாத்திரை என்றே சொல்லி கேட்கின்றனர். இப்படி நடக்கும் என்று முன்கூட்டியே யூகித்த மருந்து கட்டுப்பாட்டுத்துறை, இந்த மாத்திரையை, டாக்டர்களின் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் வழங்கக்கூடாது என்று, கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது' என்றார்.