அமெரிக்க ‘வரலாற்றில்’ முதல்முறையாக... ‘மேயர்’ ஆன 7 மாத ‘குழந்தை’ சார்லி!...
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Dec 18, 2019 04:43 PM
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 7 மாத குழந்தையான சார்லி மேயராகியுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள வொய்ட் ஹால் நகரின் தீயணைப்புத் துறையில் பணி புரியும் தன்னார்வலர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் கௌரவ மேயர் பதவி ஏலம் விடப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட அதற்கான ஏலத்தில் இந்த ஆண்டு வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் எனும் 7 மாதக் குழந்தை கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். மேயர் சார்லி என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பதவியேற்பு விழாவில் தனது கௌரவ மேயர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பதவியேற்பில் மேயர் சார்லி சார்பாக பேசிய ஃபிராங்க் என்பவர், “வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் ஆகிய நான் மேயர் பதவியை உளமாற ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு உண்மையாக இருப்பேன். விளையாட்டு மைதானத்தில் அனைவரிடமும் கனிவாகவும், அன்புடனும் இருப்பேன். தீயணைப்பு வீரர்களுக்கு பிஸ்கட் எடுத்துச் செல்வேன். எனது நாட்டை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பேன். அதற்காக அம்மாவும், அப்பாவும் எனக்கு உதவி செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மேயர் சார்லியின் வளர்ப்புத்தாய் நேன்ஸி, “மேயர் சார்லி எந்தவித பாகுபாடுமின்றி அனைவரையும் நேசிப்பார். அனைவருடைய ஒற்றுமைக்காகவும் உழைப்பார். ‘மேக் அமெரிக்கா கைன்ட் அகைன்’ என்பதே அவருடைய அரசியல் முழக்கம்” எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் மேயரான குழந்தை என்ற சிறப்பை சார்லி பெற்றுள்ளார்.
