'ஆண்களுக்காக'.. 'மில்லியன் ரூபாய்களில் பேரம்.. விற்கப்பட்ட 629 'பெண்கள்'.. அதிர்ச்சி ரிப்போர்ட்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Dec 05, 2019 12:31 PM
சீனாவைச் சேர்ந்த ஆண்களுக்கு மணம் முடிப்பதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த 629 இளம்பெண்கள் விற்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகில் மக்கள் தொகைப் பெருக்கத்தில் முதன்மையான இடத்தில் இருக்கும், சீனாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாகவும், மகப்பேறின்போது பெண் சிசுக்கள் கலைக்கப்பட்டது போன்ற அசம்பாவிதங்களாலும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்தது.
இதனால் சீனாவில் ஆண்களுக்கு நிகரான பெண்களின் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சம் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து திருமணம் செய்வதற்காக, சீனாவில் உள்ள பலருக்கும் குறிப்பிட்ட சில கும்பல்கள், பாகிஸ்தானைச் சேர்ந்த ஏழை இளம் பெண்களை 4 மில்லியனில் இருந்து 10 மில்லியன் ரூபாய் வரை, பேரம் பேசி பணத்திற்கு விற்பதாக இருநாடுகளின் விசாரணையில் தெரிய வந்த தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி விசாரித்து வரும் இருநாடுகளின் ஆய்வில் இருந்து, 629 பாகிஸ்தான் இளம் பெண்கள் சீனர்களுக்கு இதுவரை விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.