'ஊரடங்கு கெடுபிடிகளுக்கிடையே...' "கொரோனாவுக்கு படைக்கப்பட்ட கிடா விருந்து"... "பேஸ்புக்" வீடியோவால் சிக்கிய இளைஞர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Apr 17, 2020 11:33 AM

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், கும்பகோணம் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் இளைஞர்கள் சிலர் இணைந்து கிடா வெட்டி விருந்து உண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youngster from Kumbakonam makes fest amid lockdown

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக கூட வேண்டாம் எனவும், பொதுவெளிகளில் தேவையில்லாமல் சுற்றி திரிபவர்கள் மீதும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கும்பகோணம் பகுதியிலுள்ள தியாகசமுத்திரம் என்ற கிராமத்தில் இளைஞர்கள் சிலர் ஊரடங்கின் போது கிடா வெட்டிக் கொண்டாட முடிவு செய்துள்ளனர். இந்த தகவல் ஊரிலுள்ள மற்றவர்களுக்கும் பரவ சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை விருந்து நடக்கும் இடத்தில் ஒன்று கூடியுள்ளனர். கிராமத்தின் வெளிப்பகுதியில் நடந்த இந்த விருந்து நிகழ்ச்சியில் நீளமாக இலை வைத்து சோறு மாற்று கிடா கறியை பரிமாறியிருக்கிறார்கள்.

கூட்டத்தில் உள்ள இளைஞர் ஒருவர் இதனை வீடியோ எடுத்து, 'கொரோனா கொண்டாட்டம்' என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலானதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் இது சம்மந்தமாக சுமார் 20 இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் விசாரித்ததில் ஜாலிக்கு செய்ததாகவும் இளைஞர்கள் கூறியுள்ளனர். ஊரடங்கு சமயத்தில் கொரோனாவின் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.