வேலையிழப்பின் 'இரண்டாம்' அலை... '2007-09' நிலையே 'மீண்டும்' வரும் 'அபாயம்'... வால் ஸ்ட்ரீட் ஜர்னல் 'தகவல்'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் உயர் பதவியில் இருக்கும் பலருடைய வேலையும் ஆபத்தில் இருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சமூக விலகல் காரணமாக பல்வேறு துறைகள் செயல்படாமல் உள்ள நிலையே தொடர்ந்தால் 2007-09ஆம் ஆண்டுகளில் உருவான வேலையில்லாப் பிரச்சினை மீண்டும் வரும் அபாயம் உள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விற்பனைகள் சரிவு, பணப்புழக்கக் கட்டுப்பாடு ஆகியவைகளால் அதிக சம்பளம் பெறுபவர்களுடைய வேலைகளுக்கும் ஆபத்து உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 57 பொருளாதார வல்லுநர்களை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பேட்டி கண்டபோது, அவர்கள் அனைவருமே வரும் மாதங்களில் 14.4 மில்லியன் பேருடைய வேலைகள் காலியாகும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் பிப்ரவரி மாதம் 3.5 சதவீதமாக இருந்த வேலை கிடைக்காதவர்களின் சதவீதம் ஜூன் மாதம் 13 சதவீதத்தை எட்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சில்லறை மற்றும் மொத்த விற்பனை, தொழில் முறை வேலைகள், வியாபாரம், சட்டத்துறை, ஐடி, நிகழ்ச்சி மேலாண்மை, அரசாங்க வேலை என அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 45 வயதுக்குக் கீழ் உள்ளவர்களில் 26 சதவீதத்துக்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளனர் அல்லது கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளனர் அல்லது அவர்களுடைய வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
