“சும்மா இருமிக்கிட்டே இருக்க? கொரோனா வந்துடுச்சுனா?”.. நண்பனை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 15, 2020 10:07 PM

செல்போனில் கேம் விளையாண்டு கொண்டிருந்தபோது தொடர்ந்து இருமிக்கொண்டிருந்த நண்பனை இடைஞ்சலாக நினைத்து நண்பனே துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் நொய்டாவில் நிகழ்ந்துள்ளது

youth shoots his friend for coughing during game session amid covid19

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்த நிலையில் வடமாநிலங்களான மஹாராஷ்டிரா டெல்லி உள்ளிட்ட இடங்களிலும் அதன் கோர தாண்டவம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் தொடர்ச்சியாக 2 ஊரடங்கு உத்தரவுகளும் அமல் படுத்தப்பட்டுவிட்டன. இதனிடையே கொரோனா பரவுவது பற்றிய வதந்தி, பல விதமாக பலரையும் சென்றடைந்துள்ளது.

இந்த நிலையில் தலைநகர் டெல்லி அருகே உள்ள நொய்டா பகுதியில் உள்ள தயாநகர் என்ற இடத்தில் 24 வயது ப்ரவீஷ் என்பவர் தனது நண்பர்களுடன் இரவு நேரத்தில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.  அப்போது, அவர் தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்ததாகவும், அப்போது அவருடைய சக நண்பரான ஜெய்வீர் கோபம் அடைந்ததாகவும் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே நீடித்த வாக்குவாதம் ஏற்பட அப்போது ஜெய்வீர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ப்ரவீஷை நோக்கி சுட்டுள்ளார்.

அந்த குண்டு ப்ரவீஷின் காலை துளைக்க, அவர் வலியால் அலறியுள்ளார்.  இதனிடையே ஜெய்வீர் தப்பியோட, அக்கம் பக்கத்தினர் வந்து ப்ரவீஷை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பியோடிய ஜெய்வீர் மற்றும் சம்பவ இடத்தில் இருந்த மேலும் இருவரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.