'மொத்தம் 40 நாட்கள் ஊரடங்கு ஏன்?'... 'மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் விளக்கம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு தழுவிய ஊரடங்கு மொத்தம் 40 நாட்கள் பிறப்பிக்கப்பட்டது ஏன் என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, முதலில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் நேற்று முதல் மீண்டும் 19 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மொத்தம் 40 நாட்கள் ஊரடங்கு உத்தரவு எதற்காக என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, இதுகுறித்து சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், ‘ஒரு பகுதியில் 28 நாட்கள் புதிதாக கொரோனா தொற்று வரவில்லை என்றால், கொரோனா பரவலுக்கான சங்கிலி உடைந்து போனதாக நம்பப்படும். அதற்கு பிறகு புதிய பாதிப்புகள் வராது. இதனால் நோய் பரவுதல் தொடர் சங்கிலியை உடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஒவ்வொரு மாவட்டம் மற்றும் நகரில், கொரோனாவை தடுக்க அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும்’ இவ்வாறு அவர் கூறினார். மேலும், 'மருத்துவ கவுன்சிலின் 166 ஆய்வகங்களிலும், 70 தனியார் தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 6 வாரங்களுக்கு தேவையான உபகரணங்கள் கையிருப்பில் உள்ளன. 37 லட்சம் ரேபிட் கிட் கருவிகள் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றும் தெரிவித்துள்ளார்.
