‘அதெல்லாத்தையும் நாம கடந்துட்டோம்’... ‘ரெடியா இருங்க’... ‘இந்த மாதத்தில் இருந்தே’... ‘ட்ரம்பின் திகைப்பூட்டும் நம்பிக்கை’...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Apr 16, 2020 01:42 PM

கொரோனா வைரஸால் அமெரிக்கா உச்சக்கட்ட உயிரிழப்பை சந்தித்து வரும் நிலையில், அந்நாட்டு அதிபர் ட்ரம்பின் நம்பிக்கை உலக நாடுகளை திகைக்க வைத்துள்ளது.

U.S. has passed the peak on new coronavirus and reopen soon

அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக குறைந்தபட்சம் 1,900 பேர் நாள்தோறும் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,569 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் அங்கு புதிதாக 30 ஆயிரத்து 206 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் “கொரோனா வைரஸால் அமெரிக்கா உச்சபட்ச உயிரிழப்பையும், பாதிப்பையும் பார்த்து கடந்துவி்ட்டது. பல மாநிலங்களில் பொருளாதார இயல்புநிலைக்காக இம்மாத இறுதியில் தடைகள் தளர்த்தப்பட்டு திறக்கப்படும்.

அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அரசு அறிவிக்கும். அமெரிக்கா மீண்டு வரும். நமக்கு தொடர்ந்து வளர்ச்சி இருக்கிறது என நம்புவோம். அதனால், நம்நாட்டை மீண்டும் எழுச்சிக்கு கொண்டுவர வேண்டும். மே 1-ம் தேதிதான் இயல்புநிலைக்கு மாநிலங்கள் வரும்  என கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தேன். ஆனால், பல மாநிலங்கள் இம்மாத இறுதிக்குள் ஊரடங்கு தடைகளைத் தளர்த்த தயாராகிவிட்டன. தடைகளைத் தளர்த்தினாலும் உயிரிழப்பு ஏற்படும் என்றால், ஊரடங்கு இருந்தாலும் காலப்போக்கில் உயிரிழப்பு ஏற்படும்.

பல அமெரிக்க மக்களுக்கு வேலை பறிபோய்விட்டது. வீட்டுக்குள்ளே அடைந்து கிடப்பதால் மனரீதியான சிக்கல்கள், பொருளாதார பாதிப்பு, அதிகமான தற்கொலைகள் நடக்கும். இதைத் தடுக்கவே மாநிலங்கள் தடைகளைத் தளர்த்துகின்றன. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மிகவும் முக்கியம், மக்களுக்கு நம்பிக்கையூட்ட அந்த தடுப்பூசி கண்டுபிடிப்பது கட்டாயம். அதற்கான பணிகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது’ என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் எல்லாம் ஊரடங்கை மாதக் கணக்கில் நீட்டி வரும் நிலையில், பலி எண்ணிக்கையிலும், பாதிப்பிலும் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் அமெரிக்காவில், அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் இவ்வாறு கூறி வருவது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.