'வொர்க் ஃபிரம் ஹோம்' காரணமாக.. 67% இந்தியர்கள் 'இந்த' பிரச்சனையால் 'அவதி'... வெளியாகியுள்ள 'புதிய' ஆய்வு முடிவு...
முகப்பு > செய்திகள் > இந்தியாவீட்டிலிருந்தே வேலை செய்யும் 67 சதவீதம் இந்தியர்கள் சரியான தூக்கமின்றி அவதிப்படுவதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பல நிறுவனங்களின் ஊழியர்களும் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகின்றனர். இதையடுத்து வீட்டிலிருந்து அலுவலக வேலைகளை செய்யும் பெரும்பாலானோர் தூக்கமின்மை எனும் மிகப் பெரும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று இதுகுறித்து நடத்திய ஆய்வில் 67 சதவீத இந்தியர்கள் தற்போது வேலைப்பளு காரணமாக இரவு 11 மணிக்குப் பிறகே தூங்கச் செல்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஊரடங்கு முடிந்த பின்னரே தாங்கள் நிம்மதியாகத் தூங்க முடியும் என 81 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 1,500 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஊரடங்குக்கு முன்பு வரை இரவு 11 மணிக்கு முன்பே தாங்கள் தூங்கச் சென்றுவிடுவோம் என 46 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். தற்போது 11 மணிக்கு முன்பு தூங்கச் செல்வதாக 39 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர். 25 சதவீதம் பேர் இரவு 12 மணிக்கு தூங்கச் செல்வதாகவும், 35 சதவீதம் பேர் 12 மணிக்குப் பிறகு தூங்கச் செல்வதாகவும், 40 சதவீதம் பேர் பின்னிரவில்தான் தூங்கச் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.