'பட்டினி' கிடந்த "குடும்பம்"... 'ஒரே' ஒரு வார்த்தையில் வந்த "மெசேஜ்"...'திரைக்கதை' ஆசிரியரின் நெஞ்சை உருக வைக்கும் பதிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஏப்ரல் மாதம் 14 - ம் தேதி வரை இந்தியாவில் அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவு மே மாதம் மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டிற்குள் வராத காரணத்தால் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. ஏற்கனவே 21 நாட்கள் ஊரடங்கின் போது கூலி தொழிலாளர்களின் குடும்பம் கடும் அவதிக்குள்ளாகி வந்தது.

இந்நிலையில், மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் மூலம் நிவாரண உதவிகள் கிடைக்காமல் மக்கள் இன்னமும் அவதிப்படுவார்கள் என தெரிகிறது. இதனையடுத்து ஆர்டிக்கிள் 15 திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியர் கவுரவ் சோலங்கி தனது பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'எனது நண்பர் ஒருவரின் தொலைபேசிக்கு தெரியாத ஒரு தொலைபேசி எண்ணிலிருந்து சாப்பாடு என்ற ஒரே ஒரு வார்த்தை குறுஞ்செய்தியாக வந்துள்ளது. மும்பை, பாந்த்ரா பகுதியில் 8 பேர் கொண்ட கூலி தொழிலாளர் குடும்பம் ஒன்று கடந்த இரண்டு நாட்களாக ஒரு பருக்கை உணவு கூட சாப்பிடாமல் இருந்துள்ளது. என் நண்பனுடைய தொலைபேசி எண் சாப்பாடு கொண்டு போய் கொடுக்கும் ஏதோ ஒரு குழுவின் வழியாக அந்த குடும்பத்திற்கு கிடைத்துள்ளது. அந்த குடும்பத்திலுள்ள பெரியவர்களுக்கு மெசேஜ் அனுப்ப தெரியாது என்பதால் அந்த குடும்பத்திலுள்ள குழந்தை ஒன்று என்ன அனுப்புவது என்று தெரியாமல் "சாப்பாடு" என்ற ஒற்றை வார்த்தையில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.
'ஒருவர் தன் குழந்தையிடம் இனி என்னால் உனக்கு உணவளிக்க முடியாது. வேறு ஒருவர் தான் உதவ வேண்டும் என சொல்லும் போது அவன் மனம் என்ன பாடு பட்டிருக்கும். நாம் இந்த சமயத்தில் யூ - ட்யூபில் புதிய பொருட்களை எப்படி செய்வது என கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்களிடம் உண்ண ஒரு பருக்கை அரிசி கூட இல்லை. ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்தும் அவனால் இருபது நாட்கள் உண்பதற்கான உணவை சேமித்து வைக்க முடிவதில்லை. இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு நாம் செய்வது உதவியல்ல. அவர்களிடம் மன்னிப்பு கேட்டு இரு கரங்கள் கூப்பி நிற்பதே ஆகும்' என பதிவிட்டுள்ளார்.
ஊரடங்கு சமயத்தில் ஏழை மக்களின் நிலையை உணர்த்தும் இந்த உருக்கமான பதிவை நெட்டிசன்கள் பலர் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
