பாடுபட்டு சேர்த்த பணம் 'ரூ. 1000'... பற்றி எரிந்த 'தீக்குள்' பாய்ந்த கூலித் தொழிலாளி... நிமிடத்தில் நிகழ்ந்த 'சோக சம்பவம்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொன்னேரி அருகே தீப்பிடித்த குடிசை வீட்டில் பாடுபட்டு சேர்த்த 1000 ரூபாய் பணத்தை எடுக்க சென்ற கூலித்தொழிலாளி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த சிங்கிலிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலித் தொழிலாளியான இவர் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, வீட்டில் இருந்த விறகு அடுப்பில் சமையல் செய்தபோது நெருப்பை அணைக்காமல் விட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் குடிசையில் நெருப்பு பரவி பற்றி எரிந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். அப்பகுதி மக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் வீட்டில் உள்ள ரூ.1000 பணத்தை எடுத்து வருவதற்காக சுப்பிரமணி மீண்டும் குடிசை வீட்டுக்குள் சென்றார். இதில் அவர் தீயில் சிக்கிக் கொண்டார்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து சுப்பிரமணியை மீட்டனர். உயிருக்கு போராடிய அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார். பாடுபட்டு உழைத்து சேர்த்த பணம் பறிபோய்விடுமோ என்ற பயத்தில் தீக்குள் விழுந்து உயிரை விட்ட கூலித் தொழிலாளியின் மறைவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
