‘குறைந்த விலையில்’.... ‘ரேஷன் கடைகளிலும் இனி வாங்கலாம்’... அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 11, 2019 12:03 PM
மானிய விலையில், இனி ரேஷன் கடைகளில் வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் அதிரடியாக பதிலளித்துள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத் துறை அமைச்சர் காமராஜ், வழக்கமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழை பெய்யும் என்பதால், அந்த மாதங்களில் வெங்காய விலை உயர்வு எப்போதும் இருக்கும். அதன்படி இந்த ஆண்டு கூடுதலாக மழை பெய்ததால், பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகின்ற மகாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில், பெரிய வெங்காயம் அழுகிப் போனதால், தற்போது விலையேற்றம் காணப்படுகிறது.
இதேபோல், தமிழகத்தில் சின்ன வெங்காயம் அதிகம் விளையும் இடங்களில், கூடுதலான மழை பெய்ததால், சின்ன வெங்காய விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் மக்களை பாதிக்காமல் இருக்க, 5 ஆயிரம் ரேஷன் கடைகளில் மானிய விலையில் வெங்காயம் விற்பதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விலையேற்றம் தற்காலிகமானது தான் என்றும், இது நிரந்தரம் இல்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், பண்ணை பசுமை கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் வெங்காயத்தை, மானிய விலையில் ரூ. 40-க்கு விற்பனை செய்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எகிப்து, துருக்கி போன்ற நாடுகளிலிருந்து வரும் வெங்காயத்தை வரும் 13-ம் தேதி அன்று தமிழகத்ததில் பெற்றுவிடுவோம் என்று தெரிவித்த அவர், அதன்பின்பு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை துவக்கப்படும் என்று கூறியுள்ளார்.
