‘செங்கல்பட்டில்’ சிறுத்தை நடமாட்டம்?.. பீதியை கிளப்பிய சிசிடிவி வீடியோ.. உண்மை என்ன..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 17, 2020 09:06 AM

செங்கல்பட்டு அருகே சிறுத்தை நடமாடியதாக சிசிடிவி காட்சி வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Wild animal crossing road near Chengalpattu video goes viral

செங்கல்பட்டு அஞ்சூர் வனப்பகுதி அருகே மஹிந்திரா வேல்டு சிட்டி நிறுவனம் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக அப்பகுதியில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் முற்றிலும் குறைந்துள்ளது. இந்த நிலையில் மஹிந்திரா சிட்டி பிரதான சாலையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் சிறுத்தை போன்ற விலங்கு ஒன்று சாலையை கடந்து செல்வது பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. அப்பகுதி மக்கள் இதை காட்டுப்பூனை என்றும், சிலர் சிறுத்தைக்குட்டி என்றும் சொல்லி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரிகள், சிசிடிவி கேமராவில் பதிவான விலங்கு காட்டுப்பூனை என தெரிவித்துள்ளனர். மேலும் இப்பகுதியில் சிறுத்தை இருப்பது உண்மைதான் என்றும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6 வருடங்களுக்கு முன்பு செங்கல்பட்டு பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்தது. இதனால் அப்பகுதி மக்கள் இரவில் வெளியே வர தயங்கினர். இதனை அடுத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க அங்காங்கே சிசிடிவி கேமராக்களை வனத்துறையினர் வைத்தனர். மேலும் சிறுத்தையை பிடிக்க வனப்பகுதியில் 5 குண்டுகள் வைத்தனர். ஆனால் கடைசி வரை சிறுத்தை சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.