'வரிசையில் காத்திருந்த விவசாயி'... 'திடீரென மயங்கி விழுந்து நடந்த சோகம்'... 'அதிர்ச்சியில் உறைந்த மக்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 16, 2020 03:57 PM

காய்கறிகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்த விவசாயி ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம், வாணியம்பாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

vaniyambadi farmer dies during to sell the vegetables

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், இதுவரை 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர். இதனால் கொரோனாவைத் தடுக்கும் வகையில் வாணியம்பாடி நகரம் இன்று முதல் தடை செய்யப்பட்ட பகுதியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களுக்குத் தேவையான காய்கறி, மளிகை பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக, விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டு ஜனதாபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தொகுப்புகளாக பேக்கிங் செய்யப்படுகிறது.

அதன்படி முதல் நாளான இன்று, ஆலங்காயம் ஓமக்குப்பத்தைச் சேர்ந்த உமாபதி (48) என்ற விவசாயி, தன்னுடைய நிலத்தில் விளைந்திருந்த பீர்க்கங்காய்களை இன்று காலை மூட்டைகட்டிக் கொண்டு வந்து வரிசையில் நின்றிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்த அவரின் முகத்தில் சுற்றியிருந்தவர்கள் தண்ணீரைத் தெளித்தனர். ஆனால் அவர் விழிக்கவில்லை. பரிசோதனை செய்த மருத்துவர்கள், உமாபதி இறந்துவிட்டதாகக் கூறினர்.

இதைக் கேட்டு அங்கிருந்த அதிகாரிகளும் விவசாயிகளும் அதிர்ந்து போயினர். மாரடைப்பு ஏற்பட்டு விவசாயி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதைக் கண்டறிய அவரின் உடல் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, வாணியம்பாடி தாலுகா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.