‘ரெண்டு பேருமே 85 வாக்குகள்!’.. ‘அந்த கடைசி ஒரு வாக்குச் சீட்டில் இருந்த’.. ‘வேற லெவல்’ ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 03, 2020 06:42 PM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட புதுப்பீர்கடவு பஞ்சாயத்து 3வது வார்டில் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளை இரண்டு வேட்பாளர்கள் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

two Candidates with same polls in Local Body Elections Erode

416 வாக்குகளைக் கொண்ட இந்த வார்டில், 32 செல்லாத ஓட்டுகளைத் தவிர்த்து, 124 வாக்குகளை இதர வேட்பாளர்கள் பெற்றனர். இந்நிலையில் சாவி சின்னத்தில் போட்டியிட்ட சுமதி (இணைப்பில் உள்ள படத்தில் கையெடுத்து கும்பிட்டுக் கொண்டிருப்பவர்) என்பவரும், கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட நதியா என்பவரும் சரிசமமாக தலா 85 வாக்குகளைப் பெற்றனர். ஆனால் மீதம் ஒரே ஒரு வாக்குச் சீட்டு மட்டும் வாக்குப் பெட்டியில் இருந்த நிலையில், அந்த ஒரு ஓட்டு யாருக்கு போடப்பட்டிருக்கிறது என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலுமே இருந்தது. ஆனால் அந்த ஓட்டுச் சீட்டினை பிரித்துப் பார்த்தால், கட்டில் சின்னத்தின் மேல் 90 சதவீதமும், சாவி சின்னத்தின் மேல் 10 சதவீதமும் கவர் ஆகியபடி வாக்கு முத்திரை குத்தப்பட்டிருந்தது.

இதனால் சுமதி குலுக்கல் முறையில் ஒரு ஓட்டினை தேர்ந்தெடுக்க வேண்டும் என வாதிட, ஆனால் 90 % வாக்கு நதியாவின் கட்டில் சின்னத்தின் மீது இருந்ததால், நதியாவே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ‘குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பாங்கனு நெனைச்சேன். ஆனாலும் அடுத்த முறை வெற்றி பெறுவேன் என்கிற நம்பிக்கை உள்ளது’என்று சுமதியும்,  ‘யார் ஜெயிச்சாலும் ஊருக்கு நல்லது செஞ்சா போதும் என நினைத்தேன். ஆனால் என் சின்னத்தில் அதிக அளவு முத்திரை குத்தப்பட்டிருந்தது. அந்த ஒரு சீட்டு என்னை ஜெயிக்க வெச்சிருச்சி’ என்று நதியாவும் பேசியுள்ளனர்.

இதேபோல் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேவி மற்றும் பிரியதர்ஷினி இருவரும் வெற்றி பெற்றதாக அடுத்தடுத்து அறிவித்த சம்பவம் சிவகங்கையில் பகீர் கிளப்பியது. முதலில் தேவி வெற்றி பெற்றதாகக் கூறி சான்றிதழ் வழங்கப்பட்டதை அடுத்து, பிரியதர்ஷினி தரப்பில் கொடுத்த அழுத்தத்தால் சம்பவ இடத்துக்கு விரைந்த கலெக்டர் மீண்டும் இவ்விவகாரத்தை சரிபார்த்து, விடியற்காலையில் பிரியதர்ஷினி வென்றதாக அறிவிக்கப்பட்டது. 

Tags : #LOCALBODYELECTIONS #ERODE #SIVANGANAI