' அமர்நாத்தில் யாத்திரை'...'திடீரென தோன்றிய மகான் சொன்ன வார்த்தை'...'10 அடி ஆழ குழிக்குள் சாமியார்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 20, 2019 12:02 PM

கனவில் தோன்றிய மகான் சொன்ன வார்த்தைக்காக, 10 அடி ஆழ குழிக்குள் சாமியார் செய்து வரும்  பிராத்தனையை காண பக்தர்கள் பலரும் ஈரோடு வந்து செல்கிறார்கள்.

TN Saint fasts inside 10 feet deep pit for the welfare of World

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நல்லிக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் திருமணமாகி கடந்த 25 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து துறவறம் மேற்கொண்டுள்ளார். அதோடு  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவ- மாணவிகளுக்கு யோகா மற்றும் ஆன்மிக விஷயங்களையும் கற்று கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் அமர்நாத் புனித யாத்திரை சென்ற  விஸ்வநாதன், அங்கு இரவில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது  திடீரென கனவில் தோன்றிய மகான் ஒருவர் ''உலக நன்மைக்காக நல்லிக்கவுண்டன்புதூரில் 10 அடி ஆழ குழியில் பாதாள லிங்கத்தை பிரதிஷ்டை செய்து 48 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு மறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அமர்நாத் புனித யாத்திரை முடிந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு நல்லிக்கவுண்டன்புதூர் வந்த விஸ்வநாதன், தாடி வளர்த்து வித்தியாசமாக காணப்பட்டார்.

மேலும்  தன்னுடைய பெயரை நிஜானந்த காசி விஸ்வநாத சாமி எனவும் மாற்றிக்கொண்டார். இதையடுத்து 10 அடி ஆழ குழி தோண்டி அதில் பாதாள சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து மவுன விரதம் கடைபிடிக்கப்போவதாக அவர் அந்த கிராம மக்களிடம் கூறியுள்ளார். கிராம மக்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்க்க, சிலர் அவரை நம்ப மறுத்துள்ளார்கள்.

இந்தநிலையில் திடீரென இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் 50-க்கும் மேற்பட்டோர் கார்களில் நல்லிக்கவுண்டன்புதூர் வர, அவர்கள் உதவியுடன் 10 அடி ஆழ குழி தோண்டி அதில் பாதாள சிவலி்ங்கத்தை விஸ்வநாதன் பிரதிஷ்டை செய்தார். இதைத்தொடர்ந்து கடந்த 17-ந் தேதி இரவு முதல் அவர் அந்த குழிக்குள் இறங்கி சிவலிங்கத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்தார். பின்னர் தியானம் இருந்தபடி தனது மவுன விரதத்தை தொடங்கினார்.

சாமியார் மவுன விரதம் இருப்பதால் பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் ஒரு வெள்ளைத்தாளில் பதில் எழுதி கொடுத்து வருகிறார். தொடர்ந்து 48 நாட்கள் குழிக்குள் விரதம் இருந்து சிவலிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு நடத்த உள்ளார். இதனிடையே ஏராளமான பக்தர்கள் நல்லிக்கவுண்டன்புதூர் சென்று சாமியாரிடம் ஆசி பெற்று செல்கிறார்கள். அவரும் குழிக்குள் இருந்தவாறு குழிக்கு மேல் நிற்கும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.

Tags : #ERODE #TN SAINT #FASTS #DEEP PIT