லாரி - பேருந்துக்கு ‘இடையில்’ சிக்கி.. நொடிகளில் ‘நொறுங்கிய’ கார்... வெளிநாட்டிலிருந்து ‘ஊர்’ திரும்பியபோது நடந்த ‘பயங்கரம்’...
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Dec 18, 2019 12:46 PM
திண்டிவனம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் வனத்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருடைய மகன், மருமகள் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (72). ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான இவருடைய மகன் செந்தில் (35). அமெரிக்காவில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்துவரும் செந்தில் மனைவி லோகேஷ்வரியுடன் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு திரும்பிள்ளார்.
இதையடுத்து ஆறுமுகம் சென்னை விமான நிலையத்திலிருந்து மகன், மருமகளை காரில் அழைத்துக் கொண்டு ஊர் திரும்பியுள்ளார். அப்போது காரை பிரசாந்த் என்பவர் ஓட்டி வந்தநிலையில் திண்டிவனத்தை அடுத்த சலவாதி பேருந்து நிலையம் அருகே போய்க்கொண்டிருந்தபோது காருக்கு முன்னாள் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்தின் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார். எதிர்பாராத விதமாக பேருந்து ஒட்டுநர் பிரேக் போட்டதால் கண் இமைக்கும் நேரத்தில் கார் பேருந்தின் பின்பக்கம் மோதியுள்ளது. அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று காரின் மீது பயங்கரமாக மோத, ஆம்னி பேருந்துக்கும், லாரிக்கும் இடையே சிக்கிய கார் அப்பளம் போல நொறுங்கியுள்ளது.
இந்த கோர விபத்தில் காரில் இருந்த 4 பேரும் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த செந்தில், லோகேஷ்வரி, பிரசாந்த் ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.