ப்ளஸ் டூ மாணவிக்கு... இளைஞரால் நேர்ந்த கொடூரம்... திருச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 25, 2019 10:43 AM
திருச்சியில் 16 வயது மாணவியை, காதலிப்பதாகக் கூறி நண்பர்களுடன் சேர்ந்து, இளைஞர் ஒருவர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![16 year old girl abused by her lover and his friends 16 year old girl abused by her lover and his friends](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/16-year-old-girl-abused-by-her-lover-and-his-friends.jpg)
திருச்சி ஈ.பி சாலையில் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர் பிரதீப் (21). கூலித் தொழிலாளியான இவர், அதேப் பகுதியைச் சேர்ந்த ப்ளஸ் டூ படித்து வரும், 16 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார். இதனை நம்பிய அந்த மாணவி, அவரின் பேச்சில் மயங்கி மாணவியும் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், இவர்களது வீட்டுக்கு அருகில் உள்ள, அவரது சித்தி வீட்டில் தங்கி சிகிச்சை எடுத்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை நாள் என்பதால், 11 மணியளவில், அம்மாவைப் பார்க்கப் போவதாகச் சொல்லிட்டு மாணவி வீட்டை விட்டுக் கிளம்பியுள்ளார்.
அவரின் வீடு அருகே பைக்கில் நின்றுக் கொண்டிருந்த பிரதீப், மாணவியை சித்தி வீட்டில் விடுவதாகக் கூறி, அருகே உள்ள வேதாத்திரி நகரில் காலியாக ஆள்நடமாட்டம் இல்லாத புதர்மண்டிய காலிமனைப் பகுதிக்கு மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். தொடர்ந்து அங்கு வந்த பிரதீப்பின் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது மாணவியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் மொட்டை மாடியில் துணி காயவைத்துக் கொண்டிருந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் ஓடி வந்துள்ளார்.
அவர், சத்தம் போட்டுக்கொண்டே மேலிருந்து கீழிறங்கி வருவதற்குள், அந்தக் கும்பல் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. மாணவியை மீட்ட அந்தப் பெண் வழக்கறிஞர் மற்றும் அங்குள்ள குடியிருப்புவாசிகள், மாணவியின் பெற்றோர், குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் மாணவியை அவர்கள் ஒப்படைத்துள்ளனர்.
தகவல் தெரிவித்து கோட்டைக் காவல்நிலைய போலீசார் 2 மணிநேரம் தாமதமாக வந்ததாகத் தெரிகிறது. அதன்பிறகு போலீசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், `பள்ளிக்குச் சென்றுவரும் என்னை அடிக்கடி சந்தித்த பிரதீப்புடன் பழக்கம் ஏற்பட்டது. என்னைக் காதலிப்பதாகக் கூறிய பிரதீப், இதுவரை 4 முறைக்கும் மேல் தனிமையில் இருக்க அழைத்தபோது, அதற்கு மறுத்து வந்ததால், உன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றால், இதனை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி வந்தார்.
இந்த சமயத்தில் தான் ஞாயிற்றுக்கிழமை என்னை தனியாக அழைத்துச் சென்று மிரட்டி, நண்பர்களுடன் சேர்ந்து இவ்வாறு செய்துவிட்டதாக’ கதறித் துடித்தார். இதையடுத்து பிரதீப் மற்றும் அவரது நண்பர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களின் பெற்றோரிடம் விசாரணை செய்து வருகின்றனர். தலைமறைவாக இருந்த பிரதீப் மட்டும் கைதுசெய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)