'ஊரடங்கு நேரத்தில் பைக்கில் வந்த கர்ப்பிணி'... 'நொடியில் அரங்கேறிய பயங்கரம்'... சிதைந்த ஒட்டுமொத்த குடும்பம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி பகுதியை சேர்ந்தவர், மாதவன்துரை. இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதிக்கு 5 வயதில், பாரத்ராஜா என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் ராஜேஸ்வரி மீண்டும் கர்ப்பமானார். இதனிடையே நேற்று மாதவன்துரை தனது மனைவி, மகனுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் முக்கூடலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் மாலையில் தங்களது வீட்டிற்கு செல்வதற்காக அங்கிருந்து புறப்பட்டனர்.
கர்ப்பிணி மனைவி மற்றும் மகனுடன் தனது இருசக்கர வாகனத்தில், முக்கூடல் அருகே பாப்பாக்குடி மெயின் ரோட்டில் சென்றபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து மாதவன்துரை, அவரது மனைவி ராஜேஸ்வரி, மகன் பாரத்ராஜா ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மாதவன்துரை, பாரத்ராஜா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து அறிந்த பாப்பாக்குடி போலீசார், விரைந்து சென்று, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜேஸ்வரியை மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே பலியான 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது ராஜேஸ்வரிக்கு நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வில், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்த அதிர்ச்சி செய்தி தெரியவந்தது. ஊரடங்கு நேரத்தில் நடந்த கோர விபத்தில் ஒரு குடும்பமே சிதைத்து போயியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
