‘கார் ஓட்டியபோது’... ‘திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி’... ‘சென்னையில் நடந்த பயங்கரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 28, 2020 12:46 PM

சென்னை கிண்டி வட்டாட்சியர் கார் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் கார் திடீரென நிலை தடுமாறி டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்துக்குள்ளானதில், கார் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chennai car accident, tahsildar\'s driver died in madambakkam

சென்னையை அருகே மாடம்பாக்கம், அம்பிகா நகரைச் சேர்ந்தவர் ராம்குமார் (49). இவர் சென்னை கிண்டியில் தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை, வீட்டில் இருந்து கிளம்பி தன், 'பொலிரோ' காரில் பணிக்குச் செல்ல வந்து கொண்டிருந்தார். காரை சந்தீப் (40) என்பவர் ஓட்டி சென்றுக் கொண்டிருந்தார். கார், ராஜகீழ்ப்பாக்கம் சிக்னல் அருகே வந்தபோது, ஓட்டுநர் சந்தீப்பிற்கு திடீரென நெஞ்சுவலி வந்து மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் வாகனம் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது.

ஓட்டுநரால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இருப்பினும் விபத்து ஏற்படுத்துவதைத் தவிர்க்க வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். என்ன நடக்கிறது என்று தாசில்தார் ராம்குமார் சுதாரிப்பதற்குள், அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது வாகனம் மோதியது. இதில், டிரான்ஸ்பார்மர் முறிந்து ஒருபுறம் சாய்ந்தது. தாசில்தார் ராம்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தில், முகம் மற்றும் மார்பு பகுதியில் காயமடைந்த ஓட்டுநர் சந்தீப்பை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே ஓட்டுநர் சந்தீப் உயிரிழந்தார். இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடலை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு  கொண்டுசென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், பிரோதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே முழு விபரம் தெரியவரும் என்று கூறியுள்ளனர். ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.