'பொண்டாட்டி' தொல்லை 'தாங்க முடியலை சார்...' 'தயவு செஞ்சு காப்பாத்துங்க...' 'முதலமைச்சருக்கு' ஆண்கள் பாதுகாப்பு சங்கம் 'கோரிக்கை...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் இருக்கும் ஆண்களை மனைவிகள் கொடுமை செய்வதாகவும், ஆண்களை பாதுகாக்க தனியாக ஒரு ‘ஹெல்ப் லைன்’ தொலைபேசி எண் சேவையை உருவாக்க வேண்டும் என்றும் தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் டி.அருள்துமிலன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் "ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள் அடைபட்டு கிடக்கும் ஆண்களை, குடும்ப வன்முறை உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் ஆண்களில் நிலை மிக பரிதாபமாக உள்ளது. பெண்களுக்கு ஆதரவான சட்டங்களை காட்டி, ஆண்கள் பலர் தங்களது மனைவிகளால் மிரட்டப்படுகின்றனர். அடிமைப்படுத்தப்படுகின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"உண்மை நிலை இவ்வாறு இருக்க, குடும்ப வன்முறையில் ஈடுபடும் ஆண்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று கூடுதல் டி.ஜி.பி., ரவி வெளியிட்டுள்ள அறிக்கை ஆண்களுக்கு கடுமையான வேதனைகளை தருகிறது. பலர் மனதளவில் மனைவிகளால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். நிராயுதபாணியாகவும், குடும்ப வன்முறை குறித்து புகார் கொடுக்க முடியாமலும், பல ஆண்கள் வெளியில் சொல்லமுடியாத இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்."
"எனவே கொரோனா எனும் கொடும் வைரசைவிட, குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படும் ஆண்களை பாதுகாத்திடவேண்டும். குறைந்தபட்சம் ஆண்களின் பிரச்சினைகளைத் தெரிவிக்க, ஒரு ‘ஹெல்ப் லைன்’ தொலைபேசி எண் சேவையை அரசு உடனடியாக தொடங்கவேண்டும்.ஆண்களை பாதுகாக்க ஆண்கள் ஆணையமும் உருவாக்கவேண்டும்."என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.