'ஆசைய தூண்டுவாங்க'...'அப்படியே மெசேஜ் கூட உங்களுக்கு வரலாம்'...மக்களே உஷாரா இருந்துக்கோங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Sep 20, 2019 03:45 PM
ஆசை வார்த்தை கூறி, தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்யும் கும்பல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.

ஈரோடு அந்தியூரை சேர்ந்த கார் டிரைவர் நடராஜன் என்பவரின் மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் உங்களுக்கு கார் பரிசாக கிடைத்துள்ளது என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நடராஜனை தொடர்பு கொண்ட பெண் ஒருவர், '' உங்களது செல்போன் எண் குலுக்கலில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ரூ.13 ஆயிரம் பணத்தை எனது வங்கி கணக்கில் செலுத்தி காரை பெற்றுக்கொள்ளலாம்'' என கூறியுள்ளார்.
இதனிடையே ‘வாட்ஸ்-அப்’ மூலம் நடராஜன் பெயருடன் கார் பரிசு பெற்றதாக கூப்பன், பத்திரத்தையும் அனுப்பி வைத்துள்ளார். இதில் நடராஜனுக்கு சந்தேகம் வர, அவர் தனக்கு கார் வேண்டாம் என கூறியுள்ளார். இருப்பினும் அந்த பெண் விடாமல் அவரை தொந்தரவு செய்துள்ளார். இறுதியில் அவரிடம் காரியம் நடக்காது என தெரிந்தவுடன், நடராஜனை ஆபாசமாக திட்டிவிட்டு, உன்னை மொட்டை அடிக்கலாம் என்று இருந்தோம். ஆனால் நீ விவரமாக தப்பிச்சிட்ட'' என கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
சமீப காலமாக வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஒரு கும்பல், அப்பாவி மக்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தது. அதுகுறித்து மக்கள் தற்போது விழிப்புணர்வு அடைந்து வருவதால், அவர்களின் ஆசையை தூண்டும் விதமாக பேசி பணம் பறிக்கும் செயலை தற்போது செய்து வருகிறார்கள்.
எனவே பொதுமக்கள் இது போன்ற மோசடி கும்பலுக்கு இரையாகி விட வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை செய்து வருகிறார்கள். மேலும் யாரும் நமக்கு பணத்தையோ அல்லது காரையோ சும்மா கொடுக்க மாட்டார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
