"அப்பா 'சொத்தை' எழுதி வைப்பியா, மாட்டியா?..." பொறுத்து பொறுத்து பார்த்த 'மகன்'... 'தானா சேர்ந்த கூட்டம்' பட பாணியில் செய்த காரியம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சொகுசு வாழ்க்கைக்காக சொந்த அப்பாவிடமே கொள்ளையடித்த மகன் மற்றும் அவனது கூட்டாளிகள் போலீசில் சிக்கினர்.

மதுரை கூடல்நகர் பகுதியில் வசித்து வருகிறார் பிரபல ஒப்பந்ததாரர் குணசேகரன். இவர் பொதுப்பணித்துறையின் ஒப்பந்தப் பணிகளை அதிகமாகச் செய்துவரும் ஏ-1 ஒப்பந்ததாரர். இந்த நிலையில், இவரது வீட்டுக்கு வந்த மர்மக்கும்பல், தங்களை போலீஸ் என கூறிக் கொண்டு நகைகளைக் கொள்ளையடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் 27-ம் தேதி ஒப்பந்ததாரர் குணசேகரின் வீட்டுக்குள் புகுந்த அந்த மர்மக்கும்பல், "உங்கள் வீட்டில் சோதனை செய்ய வந்துள்ளோம்" எனக்கூறி துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து 1 மணி நேரம் வீட்டைச் சோதனை செய்துள்ளனர். கடைசியாக பீரோ லாக்கரையும் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். அப்போது பீரோவில் இருந்த சுமார் 170 பவுன் நகை மற்றும் 2.80 லட்சம் ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு கையொப்பமும் வாங்கியுள்ளனர்.
குணசேகரன் இதுகுறித்து போலீஸில் புகார் தெரிவிக்க, விசாரணை தொடங்கியது. விசாரணை முடிவில் கொள்ளையில் ஈடுபட்டது குணசேகரனின் முதல் மனைவியின் மூத்த மகன் சோலைராஜா என்பது தெரியவந்தது. சோலைராஜா தனது தோழி உமாதேவி உட்பட சிலரை சேர்த்துக் கொடு இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளார்.
தங்களது திட்டத்தின்படி டி.எஸ்.பி ராஜராஜன் தலைமையிலான சிறப்பு தனிப்படை எனக்கூறி குணசேகரன் வீட்டுக்குள் புகுந்தவர்கள், சோதனை செய்வதுபோல இந்தக் கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சோலை ராஜாவைக் கைது செய்த தனிப்படை காவல்துறையினர் கொள்ளைக்கு உதவியாக இருந்த சோலை ராஜாவின் தோழி உட்பட மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள்.
சோலை ராஜாவிடம் இருந்து சுமார் 170 சவரன் நகை மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவருக்குத் துப்பாக்கி எங்கேயிருந்து கிடைத்தது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
