நாளை தொடங்குகிறது 'அவனியாபுரம்' ஜல்லிக்கட்டு... நாளை மறுநாள் 'பாலமேடு'.... அடுத்த நாள் 'அலங்காநல்லூர்'... மிஸ் பண்ணாம பாருங்க...
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Suriyaraj | Jan 14, 2020 02:41 PM
பொங்கல் திருநாளான நாளை அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்குகிறது. நாளை மறுநாள் பாலமேட்டிலும், 17-ந் தேதி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்றது மதுரை. இங்கு பொங்கல் திருநாளையொட்டி 3 நாட்களும் உலகப் புகழ்பெற்ற, பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது வழக்கம்.
முதல் தொடக்கமாக பொங்கல் தினமான நாளை அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்குகிறது. இதற்கு அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் நின்று ரசிக்க பேரிகார்டுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.
வீரர்களுக்கு பயிற்சி, காளைகளுக்கு பயிற்சி ஓரிரு மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்ட நிலையில், ஏற்கெனவே பயிற்சி பெற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் ஜல்லிக்கட்டு கமிட்டியிடம் பதிவு செய்து விட்டனர். போட்டியில் பங்கேற்க, மதுரை, திணடுக்கல், தேனி, கம்பம், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு, நாளை காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி வைக்கிறது. முதலில் நாட்டாமைக்கு சொந்தமான காளை வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும். அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்படும். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை இந்த குழு மாற்றப்பட்டு, மற்றொரு குழு இறக்கப்படும். சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பித்தளை அண்டாக்கள், சைக்கிள், குத்துவிளக்கு, வேஷ்டி-துண்டு போன்றவை பரிசாக வழங்கப்பட உள்ளன.
இப்போட்டியைத் தொடர்ந்து 16-ந் தேதி காலை, மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. மஞ்சள்மலைசாமி ஆற்று திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு 700 காளைகள் களம் இறங்க உள்ளன.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அங்குள்ள கோட்டை முனிசாமி திடலில் வாடிவாசல் அருகில் முகூர்த்தக்கால் நேற்று நடப்பட்டது.
அலங்காநல்லூர், பாலமேட்டில் முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்படும். அதனை யாரும் பிடிக்க மாட்டார்கள். அதன் பிறகே வாடிவாசல் வழியாக பதிவு செய்யப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்படும். உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதை பலரும் பெருமையாக கருதுகின்றனர். இதனைக் காண வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மதுரை வந்து தங்கியுள்ளனர்.
