'பஸ் கிடைக்காததால் பைக்கில் சென்ற உதவி இயக்குனர்...' 'ஊருக்கு போகும் வழியில்...' உளுந்தூர்பேட்டை அருகே நடந்த கோரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்144 தடை சட்டத்தால் பைக்கில் ஊருக்கு பயணித்த 3 இளைஞர்கள் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் பற்றி தமிழகமெங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் எந்த வித பாகுபாடும் இன்றி உலக மக்கள் இடையே பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவியுள்ளதாக அதிகார பூர்வ தகவல் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் இதுவரை 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க தமிழகத்தில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வேலைக்காக சென்னையில் தங்கியிருக்கும் பல இளைஞர்கள் தங்களது சொந்த ஊர்களை நோக்கி சென்று வருகின்றனர்.
தற்போது போக்குவரத்து வசதியும் கணிசமாக குறைந்து வரும் நிலையில் பலர் தங்களது சொந்த வாகனத்தில் நெடுந்தூரம் வரை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சில கசப்பான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது
தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் மதுரை ஆராப்பாளையத்தை சேர்ந்த வினோத் காம்ளி சென்னையிலிருந்து மதுரை செல்ல பேருந்து கிடைக்காமல் பைக்கில் சென்றுள்ளார். அப்போது உளுந்தூர்பேட்டை அருகே தடுப்புக்கட்டையில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் கரூர் அருகே பைக்கில் சென்ற 2 பேர் லாரி மோதி உயிரிழந்துள்ளனர்.
