இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Oct 30, 2019 10:50 AM
இன்றைய முக்கியச் செய்திகள் சுருக்கமாக இங்கு தரப்பட்டுள்ளன.
1. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் நீதிபதி எஸ்ஏ போப்டே. நவ. 17ம் தேதியோடு தலைமை நீதிபதி கோகாய் பதவிக்காலம் முடிகிற சூழலில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதி எஸ்ஏ போப்டேவை பரிந்துரை செய்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நீதிபதி எஸ்ஏ போப்டே நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
2. நாகை மாவட்டத்தில் ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து புகார் தெரிவிக்க 1077 என்ற தொலைபேசி எண்ணிலும், 8300681077 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார். தனியாருக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால், கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
3. பள்ளிகளில் பயன்பாடில்லா ஆழ்துளை கிணறுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிகளில் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டடங்கள் இருந்தால் உடனே அகற்ற வேண்டும் என்றும் மாணவர்களுக்கு ஆழ்துளை கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள், ஏரி, குளங்களின் ஆபத்து குறித்து விளக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
4. ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி பொன்ராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆழ்துளை கிணறு அமைக்க வழங்கப்பட்ட அனுமதிகள் குறித்த ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா? என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். இதுவரை எத்தனை ஆழ்துளை கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது..?அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயிர் பலி வேண்டுமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், நவம்பர் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
5. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். போராட்டம் தொடர்ந்தால், பொதுமக்களின் நலனை காக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகம் போன்ற தென் மாநிலங்களில் எங்கும் மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசு மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும் மக்கள் நலனில் தங்களது பொறுப்பினை உணர்ந்து மருத்துவர்கள் செயல்பட வேண்டும் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
6. மருத்துவர்களின் கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் உரிய இடத்தை கேட்டு பெறுவோம் கும்பகோணத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார்.
7. தொழில் தொடங்குவதற்கு ஏதுவான சூழலில் உலகளவில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது என்றும் இந்தியாவில் உள்ள தொழில் தொடங்குவதற்கான சூழலை உலக முதலீட்டாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சவுதி அரேபியாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
8. லட்சத்தீவுகள், மாலத்தீவுகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று லட்சத்தீவுகளை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இதனால் வடமேற்கு திசை நோக்கி தாழ்வு மண்டலம் நகரும் என்பதால் தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் போரூர், வளசரவாக்கம், அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, மீனம்பாக்கம் உள்பட நகர் மற்றும் பல்வேறு புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
9. கனமழையால் ராமநாதபுரம், கொடைக்கானல், திண்டுக்கல் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆடலூர், பன்றிமலை, தேனி,நெல்லை, வேலூர் ,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
10. மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் பழனிசாமி , துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோட் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.