'இடைத்தேர்தலில் வெல்லப்போவது யார்'... '22 சட்டப்பேரவை தொகுதி நிலவரம் என்ன?'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 23, 2019 10:12 AM

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகளை காட்டிலும், 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் மீது தான் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

tamil nadu assembly by election vote counting

தமிழகத்தில் தற்போது மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழக மக்கள் 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் முடிவை எதிர்நோக்கியுள்ளனர். இடைத்தேர்தலின் முடிவை வைத்தே அ.தி.மு.க. அரசு நீடிக்குமா என்பது தீர்மானிக்கப்படும்.

234 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட தமிழக சட்டப்பேரவையில், அ.தி.மு.க.விடம் பேரவைத் தலைவரையும் சேர்த்து மொத்தம் 114 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். தி.மு.க.  88, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 என தி.மு.க. கூட்டணியில் 97 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். தவிர  அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. வாக இருக்கிறார். இதில் காலியாகவுள்ள இடங்கள் 22. பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 118.

தற்போது நடைபெற்று முடிந்துள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. மொத்தம் 21 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆனால் அ.தி.மு.க. 4 இடங்களில் வெற்றி அடைந்தால் போதும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம்.

அ.தி.மு.க.-விடம் உள்ள 114 சட்டப்பேரவை உறுப்பினர்களில் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் மற்றும் ஏ.பிரபு ஆகியோர் அ.தி.மு.க. தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். மேலும் அ.தி.மு.க. உடன் கூட்டணி அமைத்து இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக நிலைப்பாட்டை அறிவித்தால், அ.தி.மு.க.வுக்கு கூடுதலாக 6 இடங்கள் என மொத்தம் 11 இடங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகிவிடுகிறது.

அவ்வாறு நடந்தால் மட்டுமே அ.தி.மு.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்கும். 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. 21 தொகுதிகளில் வெற்றி அடைந்துவிட்டால் அ.தி.மு.க பெரும்பான்மையை இழந்துவிடும். பெரும்பான்மையை அடையும் தி.மு.க. ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரும். ஆனால் தி.மு.க. 21 தொகுதிகளிலும் வெற்றி பெறுமா என்பது பெரிய கேள்விக்குறி தான்.

ஒருவேளை பெரும்பான்மைக்கு தேவையான 21 இடங்களில் தி.மு.க. வெற்றி பெறாமல், 15 தொகுதிகளில் வெற்றி பெற்றால் அதுவும் அ.தி.மு.க. ஆட்சிக்கு சிக்கல் தான். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க. மீது அதிருப்தியில் இருக்கும் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கருணாஸ், தமிமுன் அன்சாரி மற்றும் தனியரசு உள்ளிட்டோரை வைத்து ஸ்டாலின் வேறு முடிவு எடுக்க நேரிடலாம்.

காரணம், தமிமுன் அன்சாரி மட்டுமே தி.மு.க.-வுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளார். அதிருப்தியில் இருக்கும் 3 சட்டமன்ற உறுப்பினர்கள், தினகரன், தனியரசு, கருணாஸ் போன்றவர்கள் ஸ்டாலின் முதல்வராவதை விரும்ப மாட்டார்கள். இதனால் இந்த நிலை ஏற்பட்டால் மறுதேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும் மத்தியில் அமையும் அரசைப் பொறுத்தும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெல்லப்போகும் தொகுதிகளைப் பொறுத்தே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழுமா என்பது தெரியவரும்.

இந்நிலையில், சட்டப்பேரவை இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.